சினிமா செய்திகள்

"பெண்களுக்கு காதலை விட மரியாதை அதிகம் கொடுங்கள்" - மேடையில் மனம் திறந்த சூர்யா

'விஸ்வநாத் & சன்ஸ்' படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.

சென்னை,

மனைவிக்கு காதலை விட மரியாதை அதிகம் கொடுங்கள் என்று 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் சூர்யா மனம் திறந்து பேசினார்.

விஸ்வநாத் & சன்ஸ்

நடிகர் சூர்யாவின் 46-வது திரைப்படமான 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கோவையில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, மமிதா பைஜு, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ், இயக்குநர் வெங்கி அட்லூரி, நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் சுனில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காதல் மாறக்கூடாது

விழாவில் பேசிய சூர்யா, "காதல் என்பது தாலி கட்டும் நாளில் மட்டும் உணரப்படும் ஒன்று அல்ல. ஒவ்வொரு நாளும் காதலிக்க வேண்டும். 20 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தாலும் அந்த அன்பும், காதலும் தொடர வேண்டும். வாழ்க்கையில் காலம் மாறலாம், முன்னுரிமைகள் மாறலாம், மனிதர்களும் மாறலாம். ஆனால், நம் துணை மீது வைத்திருக்கும் அன்பு மட்டும் ஒருபோதும் மாறக்கூடாது" என்று கூறினார்.

பெண்களின் தியாகத்தை மதிக்க வேண்டும்

மேலும் பேசிய அவர், "ஒரு பெண் வாழ்க்கையில் ஒரு நிலையை அடைவதற்காக கடந்து வரும் பாதை, ஒரு ஆண் கடந்து வருவதை விட மிகவும் கடினமானது. ஒரு வீட்டை கவனித்துக் கொள்வதிலும், குழந்தையை பெற்றெடுத்து வளர்ப்பதிலும் பெண்கள் எண்ணற்ற தியாகங்களை செய்கிறார்கள். அந்த தியாகங்களுக்கு எப்போதும் மதிப்பளிக்க வேண்டும்" என்றார்.

காதலை விட மரியாதை அதிகம் கொடுங்கள்

தொடர்ந்து பேசிய சூர்யா, "உங்கள் துணைக்கு எப்போதும் மரியாதையும் அன்பும் குறையக் கூடாது. உண்மையில் காதலை விட மரியாதையை அதிகமாக அவர்களுக்குக் காட்டுங்கள். அந்த மரியாதையை வாழ்க்கை முழுவதும் உறுதியாக கடைபிடியுங்கள்" என்று உருக்கமாக பேசினார்.

ஆகஸ்ட் 14-ல் 'விஸ்வநாத் & சன்ஸ்'

'கருப்பு' படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தை தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், ஒரு நடுத்தர வயது விளையாட்டு வீரருக்கும், அவர் மீது ஈர்ப்பு கொள்ளும் இளம் பெண்ணுக்கும் இடையேயான உறவை மையமாக கொண்ட கதையாக உருவாகியுள்ளதாக தெரிகிறது. இப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி திரைக்கு வருகிறது.