தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனே இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இவரும் இந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் 6 வருடங்கள் காதலித்து கடந்த 2018-ல் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். சில தினங்களுக்கு முன்பு தீபிகா படுகோனேவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பானது. சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி வீடு திரும்பி உள்ளார். இந்த நிலையில் தீபிகா படுகோனேவுக்கும் ரன்வீர் சிங்குக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாகவும் ரன்வீர் சிங்கை தீபிகா படுகோனே விவாகரத்து செய்ய இருப்பதாகவும் இணைய தளத்தில் தகவல் வெளியாகி காட்டுத்தீயாக பரவி வருகிறது. சில மாதங்களாகவே இருவரும் இணக்கமாக இல்லை என்றும் கணவன் மனைவி உறவில் இடைவெளி அதிகமாகி உள்ளது என்றும், விவாகரத்துவரை செல்லும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்பட்டு வந்தது. மேலும் தீபிகா படுகோனே வருமானம் ரன்வீர் சிங்கை விட அதிகம் என்கின்றனர். சமீபத்தில் ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படம் சர்ச்சையானபோது தீபிகா படுகோனையும் பலர் விமர்சித்தனர். இதுவும் தகராறுக்கு காரணமாக இருக்கலாம் என்கின்றனர். ஆனாலும் பிரியப் போவதை இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை.