பெங்களூரு,
113 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் கைதான கன்னட நடிகை ரன்யா ராவுக்கு ரூ.90 கோடி அபராதம் விதித்து சுங்கத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கன்னட திரையுலகில் நடிகையாக இருந்தவர் ரன்யா ராவ். இவரது வளர்ப்பு தந்தை ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ்.அதிகாரி ராமசந்திர ராவ் ஆவார். கடந்த ஆண்டு (2025) மார்ச் மாதம் 3-ந்தேதி துபாயில் இருந்து பெங்களூரு விமான நிலையத்துக்கு தங்கம் கடத்தி வந்தபோது டெல்லி வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளால் ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து 14 கிலோ 213 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள். மேலும் தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர்கள் 3 பேரையும் அதிகாரிகள் கைது செய்தார்கள்.
இதுகுறித்து வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வளர்ப்பு தந்தை மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்ததால், அவரது செல்வாக்கை பயன்படுத்தி அவர் தங்கம் கடத்தலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதன்காரணமாக கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ந்தேதியில் இருந்து கடந்த ஆண்டு (2025) பிப்ரவரி வரை 113 கிலோ தங்கத்தை துபாயில் இருந்து ரன்யா ராவ் கடத்தி வந்தது தெரியவந்தது. பரப்பன அக்ரஹாரா சிறையில் ஓராண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த ரன்யா ராவ், ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில் இதுதொடர்பாக சுங்கத்துறை இணை இயக்குனர் சந்தீப் 399 பக்கங்கள் கொண்ட நோட்டீசை நேற்று முன்தினம் அனுப்பி உள்ளார். அந்த நோட்டீசில் சட்டவிரோதமாக 113 கிலோ தங்கம் கடத்தியதற்காக ரன்யா ராவுக்கு ரூ.89 கோடியே 91 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. அதுபோல், தங்கம் கடத்தலில் உடந்தையாக இருந்த தருண், சாகில் ஜெயின், பரத்குமார் ஆகிய 3 பேருக்கும் சுங்கத்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். 4 பேரும் தங்களின் அபராதத்தை செலுத்தவில்லை என்றால், அவர்களது சொத்துக்கள் முடக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.