நடிகர் ஜெய் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக இருந்து தற்போது தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். கட்சி ஆரம்பித்து சந்தித்த முதல் தேர்தலிலேயே அதிக இடங்களில் வென்று முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பாராட்டினர்.
இதனிடையே, திரைப்பிரபலங்கள் பலரும் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்போது முதலமைச்சருடனான சந்திப்பின் போது எடுத்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ஜெய் முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து பேசியுள்ளார். சந்திப்பின்போது எடுத்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு நெகிழ்ச்சியான தருணத்தையும் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் ‘ஜனநாயகன்’ உலகெங்கும் திரையரங்குகளில் வெளியான மறுநாள் நடிகர் ஜெய், தமிழக முதல்-அமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன் ஒரு செடியை முதலமைச்சருக்கு பரிசாக அளித்தார்.
சந்திப்பு குறித்து நடிகர் ஜெய் எக்ஸ் தளத்தில் “நல்ல விஷயங்கள் நடக்க நேரம் எடுக்கும்... சிறந்த விஷயங்கள் தங்களின் நேரத்தைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளும்...” என்று பதிவிட்டுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் ஜெய், “எனது அண்ணாவை சந்தித்தது மிகவும் இனிமையான நல்வரவேற்பாக இருந்தது. நாங்கள் ஒன்றாக செலவிட்ட நேரத்துக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்க அவரது உடல், பலம், தொடர் வெற்றிகள் பெற வாழ்த்துகள்” என கூறினார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஜெய். இவர் 2002ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து,சென்னை 600028, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். இவரது நடிப்பில் சமீபத்தில் சட்டென்று மாறுது வானிலை என்ற படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கும் ‘டெஸ்லா’ படத்தில் நடித்துவருகிறார்.
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக நடிகர் ஜெய் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.