விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் கதை தன்னுடையது என்று கூறி போராடியவர் கோபி நயினார். அதன் பிறகு நயன்தாரா நடித்த ‘அறம்’ படம் மூலம் கவனம் ஈர்த்தார். முதல் படமே அட்டகாசமாக இருந்ததால் கோபி நயினார் நம்பிக்கைக்குரிய இயக்குநர் என்ற பெயரையும் பெற்றார். இவர் அடுத்ததாக கருப்பர் நகரம் என்கிற படத்தை இயக்கும் பணிகளை மேற்கொண்ட நிலையில் படம் கைவிடப்பட்டது.
இயக்குநர் வெற்றி மாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடித்த ‘மனுஷி’ என்கிற படத்தை இயக்கினார். அரசியல், பெண்ணிய சிந்தனை கொண்ட படமான இது தணிக்கை வாரியத்தில் சமர்பிக்கப்பட்டு, சென்சார் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.
இந்நிலையில், கோபி நயினார் இயக்கியுள்ள புதிய திரைப்படம் ‘காலனி’. ராதிகா சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோ நடிக்கின்றனர். 'தேனிசைத் தென்றல்' தேவா இசையமைக்கிறார். அதிதி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெற்றி மாறனும், மோஷன் வீடியோவை விஜய் சேதுபதியும் வெளியிட்டனர்.