அமராவதி,
ஆந்திரப் பிரதேச அரசு ‘ஜெயிலர் 2’ திரைப்படத்துக்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து முதல் 7 நாட்களுக்கு வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்துக்கு ஆந்திரப் பிரதேசத்தில் முதல் 7 நாட்களுக்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இப்படம் வரும் 15-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவும் தொடங்கியுள்ள நிலையில், முதல் நாள் காட்சிகளைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் வேகமாக விற்பனையாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு ‘ஜெயிலர் 2’ திரைப்படத்துக்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, படத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து முதல் 7 நாட்களுக்கு வழக்கமான கட்டணத்துடன் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒற்றைத் திரையரங்குகளில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.50-ம், பல திரைகளைக் கொண்ட திரையரங்குகளில் ரூ.75-ம் கூடுதலாக வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஆந்திரப் பிரதேசத்தில் ‘ஜெயிலர் 2’ படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகர்களுக்கான டிக்கெட் கட்டணம் அதிகரிக்க உள்ளது.