சென்னை,
போதைப்பொருட்களை புரமோட் செய்யும் நோக்கம் இல்லை என ஜேசன் சஞ்சய் கூறினார்.
நடிகரும் தமிழக முதல் அமைச்சருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியுள்ளது. விஜய்யின் மகன் என்பதால் முதல் படத்திலேயே ஜேசன் சஞ்சய் படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில், முதல் காட்சியை பார்க்க ஜேசன் சஞ்சயின் தாயாரும் முதல் அமைச்சர் விஜய்யின் மனைவியுமான சங்கீதா வருகை தந்தார். வடபழனியில் உள்ள திரையரங்கில் சங்கீதா, சிக்மா படத்தை பார்த்து ரசித்தார்.
இந்தநிலையில், `தாத்தா படம் பாக்கல'' என சிக்மா பட இயக்குனர் ஜேசன் சஞ்சய் கூறியுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
``நடிப்பதற்கு முழு ஆர்வம் இல்லை என்று சொல்ல முடியாது. இயக்குனராக கத்துகிறதுக்கு நிறைய விஷயங்கள் இருந்தது. பல போராட்டங்கள் இருந்தாலும் படம் நல்லபடியாக ரிலீஸ் ஆயிருக்கு
தாத்தா இன்னும் படம் பாக்கல பாத்துட்டு பாராட்டுவாங்க. அம்மா, தங்கச்சி எல்லாரும் பாத்தாங்க ரொம்ப என்ஜாய் பண்ணாங்க. எல்லாருக்கும் ரொம்ப நன்றி. உங்களுடைய ஆதரவுக்கு நன்றி.
சிக்மா' படத்தில் போதைப்பொருட்களால் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றித்தான் பேசியுள்ளேன், போதைப்பொருட்களை புரமோட் செய்யும் நோக்கத்தில் எந்தக் காட்சியும் எடுக்கவில்லை, கஞ்சா செடி வளர்ப்பது போன்ற காட்சிகளும் அந்தக் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதற்காகவே வைத்துள்ளேன்.
டாலர் பணம் தொடர்பான காட்சிகளும், சூதாட்ட கிளப் தொடர்பான கதையும் முழுமையாக கற்பனையானது, தமிழகத்தில் சூதாட்ட கிளப்புகள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, நான் அதைத்தான் சொன்னேன்.
இவ்வாறு அவர் கூறினார்.