தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார்.
தமிழ் திரையுலகின் தனித்துவமான இயக்குநர்களில் ஒருவரான தியாகராஜன் குமாரராஜா, 'ஆரண்ய காண்டம்', 'சூப்பர் டீலக்ஸ்', 'மாடர்ன் லவ் சென்னை' உள்ளிட்ட படைப்புகள் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அந்தப் படத்திற்காக விஜய் சேதுபதி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் வென்றார்.
இந்த வெற்றிக் கூட்டணி தற்போது 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. தியாகராஜன் குமாரராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனங்களான டைலர் டர்டன் மற்றும் கினோ பிஸ்ட் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. இந்த படத்தில், கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி, கிஷோர், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைக்கிறார்.
தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 'பாக்கெட் நாவல்' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இதனை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள படக்குழு அறிவித்திருந்தது. 'பாக்கெட் நாவல்' திரைப்படத்தின் டீசர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘பாக்கெட் நாவல்’ படத்தின் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் இணைந்துள்ளார்.
இப்படத்தில் முதலில் இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்ட இளையராஜாவுக்கும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் இளையராஜா படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் படத்தின் புதிய அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஒரு பாடலுக்கு நடனமாடும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், “இனிமேல் அது வதந்தி கிடையாது, அதிகாரப்பூர்வமானது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் மூலம் முதன் முறையாக தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனால் படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.