சினிமா செய்திகள்

சிக்ஸ்பேக் உடன் கதாநாயகனாக அறிமுகமாகும் தனுஷ் மகன்?

நடிகர் தனுஷின் மகன் யாத்ரா கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் தமிழ் மட்டுமில்லாமல், டோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என எல்லா மொழிகளிலும் நடித்து வருகிறார். அதேபோல், அவர் ஒரு நடிகர் மட்டுமல்ல, பாடகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளைக் கொண்டுள்ளார்.

2016-ல் அவரது இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றிக்குப்பின் கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்திய தனுஷ், தொடர்ந்து ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம், இட்லி கடை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது, அவர் நடிப்பில் உருவான கர திரைப்படம் வரும் 30 ஆம் தேதி வெளியாகிறது.

நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷே இப்படத்தை இயக்கி, தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான வேலைகளைத் தொடங்குவதற்கு முன்னர், திருப்பதி கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து விட்டு வந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் தனுஷின் மூத்த மகன் யாத்ரா விரைவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகவும் அதற்காக சிக்ஸ்பேக் வைக்கும் முயற்சிகளில் இருப்பதாகவும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும், யாத்ரா அறிமுகமாகும் படம் குறித்து தனுஷே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கூறியுள்ளார்.