சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷின் “இம்மார்ட்டல்” திரைப்படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது

மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், கயாடு லோஹர் நடித்த ‘இம்மோர்டல்’ படம் செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ளது.

ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ‘இம்மோர்டல்’ திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. இதற்கிடையே, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார்.ஜிவி பிரகாஷ். சமீபத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைத்த கென் கருணாஸ் இயக்கி நடித்த ‘யூத்’ படத்தின் பாடல்கள் வைரலானது.

‘ஜோ’ திரைப்படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் கிரிக்கெட் வீரராக நடிக்கவுள்ளார்.

அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கும் ‘இம்மோர்டல்’ படத்தில் ஜிவி பிரகாஷ் நடித்துள்ளார். இதில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும், டி.எம்.கார்த்திக், லொள்ளு சபா மாறன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒரே வீட்டில் நடக்கும் ஹாரர் திரில்லர் பாணியிலான கதையாக இதன் காட்சிகள் இருந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. ரொமான்ஸ், திரில்லர், பேன்டஸி கதைக்களத்தில் உருவாகி வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், ‘இம்மோர்டல்’ திரைப்படத்தின் ‘ஷி இஸ் மை செல்லக்குட்டி’ என்ற இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை சாம் சிஎஸ் இசையமைத்து பாடியுள்ளார்.