சினிமா செய்திகள்

ஜிவி பிரகாஷ் நடிக்கும் “வெக்கை” படத்தின் போஸ்டர் வெளியீடு

அகிரன் மோசஸ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் ‘வெக்கை’ திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷ் குமார் தொடர்ந்து பல்வேறு மொழிகளில் பெரிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இசையில் மட்டுமல்லாது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்கிடையே, தெலுங்கு மற்றும் தமிழ்த் திரைப்படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். ‘ஜோ’ படத்தின் இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கவுள்ளார்.

இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீலம் புரடக்ஷன்ஸ் நிறுவனம் மற்றும் டிவைன் புரடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ஜிவி நடித்து முடித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித்தின் நீண்டகால இணை இயக்குநரான அகிரன் மோசஸ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்நிலையில், சென்னையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு, ‘வெக்கை’ என பெயரிட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஸ்ரீநாத் பாசியும் நாயகியாக ஷிவானி ராஜசேகர் நடித்துள்ளனர். இப்படம் அடுத்த சில மாதங்களில் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

பொதுவாக, நீலம் தயாரிப்பில் உருவாகும் படங்கள் அனைத்தும் சமூக கருத்துக்களைப் பேசுவதாகவும், பொது வெளியில் விவாதங்களை உருவாக்குவதாகவும் இருக்கும். இதனிடையே, ஜி.வி பிரகாஷ் இந்த கூட்டணியில் இணைய இருப்பதால், படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.