ஹெச் ராஜா நடித்துள்ள ‘செய் செய்யாதே’ படம் அக்டோபர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
மருத்துவ விழிப்புணர்வு, போதைப்பொருள் எதிர்ப்பு மற்றும் சமூகப் பொறுப்பை மையமாகக் கொண்ட சமூக விழிப்புணர்வுத் திரைப்படம் ‘செய் செய்யாதே’
ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ் சார்பில் சுப்புலட்சுமி ஜெயராம் தயாரித்துள்ள இப்படத்தை டாக்டர் எஸ்.ராஜா கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கியுள்ளார். குரு விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். தர்ஷினி ரெட்டி, தபிதா குணரத்னே, மோனிகா பிரீத்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, தமிழக முதல்-அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்றைய சமூகத்தில் இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் பழக்கம், மருத்துவம் குறித்த விழிப்புணர்வின் அவசியம், மனித உயிரின் மதிப்பு மற்றும் தனிமனித ஒழுக்கம் போன்ற முக்கியமான கருத்துகளை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் பற்றி இயக்குநர் டாக்டர் எஸ். ராஜா கூறும்போது, ‘‘இப்படம் மருத்துவத் துறையை பற்றிய படம். இன்றைய இளம் தலைமுறையை அச்சுறுத்தும் போதைப்பொருள் பழக்கம், சுயமருந்து உட்கொள்ளுதல் போன்ற முக்கிய சமூகப் பிரச்சினைகளை இப்படம் பேசுகிறது. படத்துக்காக அமெரிக்காவில் இருந்து பலமுறை வந்து பல கஷ்டங்களோடு இதை உருவாக்கியுள்ளேன். தமிழ் சினிமாவில் பலர் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கின்றனர். அவர்களுக்குச் சரியான வாய்ப்புகளைத் தந்து நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்பது மட்டும்தான் ஆசை” என்றார்.
ஹெச் ராஜா நடித்துள்ள ‘செய் செய்யாதே’ படம் அக்டோபர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகம் முழுக்க சுமார் 100 தியேட்டர்களில் படத்தை வெளியிடுகின்றனர்.
தமிழக பாஜக கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா ‘கந்தன் மலை’ என்ற படத்தில் ஏற்கனவே நடித்திருந்தார்.