சினிமா செய்திகள்

ஹன்சிகாவின் புதிய அவதாரம்... ‘யட்சிணி’ படத்தில் இரட்டை வேடம்!

இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கி, தயாரித்துள்ளார்.

சென்னை,

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி, தற்போது ‘யட்சிணி’ என்ற திகில் திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆர்.கண்ணன் இயக்கி, தயாரித்துள்ளார். இ5 எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் ஜெயகிருஷ்ணன் படத்தை வெளியிடுகிறார்.

இரண்டு வேடங்களில் ஹன்சிகா

‘யட்சிணி’ திரைப்படத்தில் ஹன்சிகா முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி மற்றும் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பெண் என இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் அவர் தோன்றுகிறார். நரிக்குறவர் இனப் பெண்ணாக நடிப்பதற்காக, அந்தச் சமூகத்தினருடன் பழகி, அவர்களின் வாழ்க்கை முறை குறித்து அறிந்துகொண்டு பயிற்சியும் பெற்றுள்ளார்.

கந்தர்வக்கோட்டையில் நடக்கும் மர்மங்கள்

பல காலங்களுக்கு முன்பு ஒரு மன்னனால் கட்டப்பட்ட கந்தர்வக்கோட்டையை ஆராயச் செல்லும் இளம்பெண் எதிர்கொள்ளும் மர்மங்களும் திருப்பங்களும் படத்தின் கதையாக அமைந்துள்ளன. திகில் நிறைந்த காட்சிகளுடன் உருவாகும் இப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.60 லட்சத்தில் பிரமாண்ட அரங்கு

படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்குவதற்காக, சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் சுமார் ரூ.60 லட்சம் செலவில் பிரமாண்டமான மலைக்குகை அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. 1943-ம் ஆண்டில் நடைபெறுவது போன்ற பின்னணிக் காட்சிகள் இந்த அரங்கில் படமாக்கப்பட்டுள்ளன. இப்படத்தில் மெட்ரோ ஷிரிஷ், தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், ஸ்டண்ட் சில்வா, வினோதினி, பவன், பிரிகிடா சகா, வடிவேல் முருகன், கலைராணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எல்.வி.கணேஷ் முத்து இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

SCROLL FOR NEXT