சினிமா செய்திகள்

கானக் குயிலே காலமானாயா? – எஸ். ஜானகிக்கு வைரமுத்துவின் உருக்கமான இரங்கல்

பாடகி ஜானகி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

சென்னை,

'தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்' என்று கொண்டாடப்பட்ட பழம்பெரும் பின்னணி பாடகி ஜானகி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது மறைவு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 88 வயதான ஜானகி உடல் நல பாதிப்பால் மைசூருவில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஜானகிக்கு சிகிச்சையின் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது. பாடகி ஜானகி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

அரைநூற்றாண்டு ஆறுதலே அடங்கிவிட்டாயா? ‘சிங்கார வேலனே தேவா’வில் நாதஸ்வரத்தை வென்றுகாட்டிய கீதவாணியே முடிந்துவிட்டதா உன் மூச்சு? தாய்மையாய் தமிழாய் காதலாய் கருணையாய் கண்ணீராய் புன்னகையாய் எங்கள் வாழ்வோடு கலந்த பாட்டரசி உனக்கும் மரணமா?

இரவுகள் விடிவதில்லை

‘நாதம் என் ஜீவனே’ என்றாயே உன் நாதம் இருக்கிறது ஜீவன் இல்லையே, சிரித்த முகமும் சிவப்பு நிலாப் பொட்டும் ஆடாமல் அசையாமல் சித்திரம் பாடுவதுபோல் செவ்வாய் அசைக்கும் அழகும் கண்களை விட்டுக் காணாமல் போகுமோ!

நீ பாடமுடியாத பாடலென்று எதுவும் இல்லை உன் பாடல் கேளாமல் இரவுகள் விடிவதில்லை கண்ணதாசன் எழுதி நீ பாடிய பல்லவி கொண்டே புகழ்வணக்கம் செலுத்துகிறேன் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால் உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்’ வாழ்க நீ அம்மா!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.