சினிமா செய்திகள்

"மூடா பாடுங்கன்னு சொன்னாரு" - ரெக்கார்டிங் ஸ்டூடியோ அனுபவம் பகிர்ந்த பாடகி சுனிதா சாரதி

பாடகி சுனிதா சாரதி, பெண் பாடகர்கள் ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களில் எதிர்கொள்ளும் சில அசௌகரியங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சென்னை,

ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் தான் ஒரு பாடலை பதிவு செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பாடலை, இயக்குநர் "மூட்" (MOOD) ஆகப் பாடச் சொன்னதாகவும், அந்தச் சூழல் தனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

முன்னணி பின்னணி பாடகி

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பிரபலமான பின்னணி பாடகியாக வலம் வருபவர் சுனிதா சாரதி. கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘ஹே நீ ரொம்ப அழகா இருக்க’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘இனி நானும் நானில்லை’ பாடல் மூலம் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து ‘கண்ணிலே கல்மிஷம்’, ‘என்னோடு நீ இருந்தால்’, ‘சுத்துதோ சுத்துதோ பூமி’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘யாக்கை திரி’ உள்ளிட்ட பல்வேறு பிரபல பாடல்களை பாடியுள்ளார்.

ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் ஏற்பட்ட அசௌகரியம்

இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுனிதா சாரதி, பெண் பாடகர்கள் ரெக்கார்டிங் ஸ்டூடியோக்களில் எதிர்கொள்ளும் சில அசௌகரியங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

தான் ஒரு பாடலை பதிவு செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பாடலை, இயக்குநர் தன்னை "மூட்" (MOOD) ஆகப் பாடச் சொன்னதாகவும், அங்கு முழுக்க ஆண்கள் மட்டுமே இருந்த அந்தச் சூழல் தனக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

“மரியாதையான கலைச் சொற்களை பயன்படுத்த வேண்டும்”

மேலும், பாடல்களை பதிவு செய்யும்போது பயன்படுத்தப்படும் சில வார்த்தைகள் குறித்தும் சுனிதா சாரதி தனது கருத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக “Sensuality”, “Sexuality” போன்ற வார்த்தைகளுக்கு பதிலாக, பெண் கலைஞர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தாத வகையில் மரியாதையான கலை சார்ந்த சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பெண் பாடகர்கள் பணியாற்றும் சூழல் பாதுகாப்பாகவும், மரியாதைக்குரியதாகவும் இருக்க வேண்டும் என்பதையும் தனது கருத்துகள் மூலம் சுனிதா சாரதி வலியுறுத்தியுள்ளார்.