சென்னை,
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை மடோனா செபாஸ்டியன், தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘காதலும் கடந்து போகும்’, ‘கவண்’, ‘ப பாண்டி’, ‘ஜூங்கா’, ‘வானம் கொட்டட்டும்’, ‘லியோ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘ஹார்டின்’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நடிகர் சனந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மகள் இமயாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார்.
வருகிற ஜூலை 26-ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஹார்டின்’ திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மடோனா செபாஸ்டியன், படத்தின் கதை தன்னை முதல் முறையிலேயே கவர்ந்ததாக தெரிவித்தார்.
“இயக்குநர் கிஷோர் குமார் ‘ஹார்டின்’ படத்தின் கதையை சொல்லும்போதே அந்தக் கதையுடன் ஒன்றிவிட்டேன். கதையின் உணர்வுகளும், அதில் இருந்த புதுமையும் என்னை மிகவும் ஈர்த்தது” என்று கூறினார்.
மேலும் அவர் பேசுகையில், “பல ஆண்டுகளாக நாம் ஏராளமான காதல் கதைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் ‘ஹார்டின்’ திரைப்படம் காதல், நகைச்சுவை மற்றும் உணர்வுகளை புதுமையான முறையில் சொல்லும் படைப்பாக இருக்கும். இந்த படம் பார்வையாளர்களின் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
உங்கள் அன்புக்குரியவர்களுடன் இந்தப் படத்தை திறந்த மனதுடன் பாருங்கள். உண்மையாகவே இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். ரசிகர்கள் அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்தார்.
ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ள ‘ஹார்டின்’ திரைப்படம், இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களை கவரும் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் நிலவி வருகிறது.