சினிமா செய்திகள்

டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கிற்கு ஏ.வி.எம். பதில் அளிக்க வேண்டும்- ஐகோர்ட்டு உத்தரவு

'உயிருள்ள வரை உஷா' திரைப்படத்தின் பாடல்களை பதிப்புரிமையை மீறியதாக ஏ.வி.எம் நிறுவனத்தின் மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சென்னை,

இயக்குனர், நடிகர் என்று பன்முகத் திறமையைக் கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் கதை எழுதி, இயக்கி, இசையமைத்த திரைப்படம் 'உயிருள்ள வரை உஷா'. 1983-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மீதான உரிமையை ஏ.வி.எம்., நிறுவனத்துக்கு டி.ராஜேந்தர் வழங்கியிருந்தார்.

இந்தநிலையில், சுமார் 42 ஆண்டுகளுக்கு பின்னர் 'உயிருள்ள வரை உஷா' திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் மறுவெளியீடு செய்யப்பட்டது. அதேநேரம், இந்த படத்தின் பாடல்கள் ஏ.வி.எம். நிறுவனத்திடம் இருந்து வர்த்தக ரீதியாக பல நிறுவனங்களுக்கு கைமாறியுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து, 'உயிருள்ள வரை உஷா' படத்தின் பாடல்களை பதிப்புரிமையை மீறி, வர்த்தகரீதியாக பயன்படுத்த, ஏ.வி.எம். மற்றும் டபிள்யூ.எல். எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் டி.ராஜேந்தர், அவரது மனைவி உஷா ராஜேந்தர் ஆகியோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இந்த வழக்கிற்கு ஏப்ரல் 20-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி, ஏவி.எம். மற்றும் டபிள்யூ.எல். எபிக் மீடியா ஆகிய நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.