பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு காமாட்சி பாளையா போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் நடிகர் தர்ஷன், அவரது தோழி நடிகை பவித்ரா கவுடா, தர்ஷனின் ஆதரவாளர்கள் வினய், ராகவேந்திரா, தனராஜ், நந்தீஸ், பவன் ஆகிய 7 பேருக்கும் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது.
இதனால் 7 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். ஆனால் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடாவுக்கு வழங்கிய ஜாமீனை மட்டும் சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்ததால், அவர்கள் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக தர்ஷனுக்கு இன்னும் ஓராண்டு வரை ஜாமீன் கிடையாது என சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கிடையில், ரேணுகாசாமி கொலையில் வெளியே இருந்து வரும் தர்ஷன் ஆதரவாளர்களான வினய், பவன், ராகவேந்திரா, தன்ராஜ், நந்தீஸ் ஆகிய 5 பேரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி அரசு சார்பில் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி ராஜய்யா முன்னிலையில் நடைபெற்றது. அரசு தரப்பு ஆஜரான வக்கீல், ரேணுகாசாமி கொலையில் கைதான 5 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதால், சாட்சிககளை அழிக்க கூடும், எனவே ஜாமீனை ரத்து செய்யும்படி வாதிட்டார்.
இதற்கு 5 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு பெற்றதை தொடர்ந்து நேற்று மதியம் நீதிபதி ராஜய்யா தீர்ப்பு கூறினார். அப்போது தர்ஷன் ஆதரவாளர்கள் 5 பேரின் ஜாமீனையும் ரத்து செய்ய மறுத்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.