மும்பை,
திரிஷ்யம் 3 திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. மோகன்லால் நடித்த இந்த படத்தின் முதல் இரண்டு பாகங்கள் பெற்ற வெற்றியுடன் ஒப்பிடும்போது, மூன்றாம் பாகத்தில் அந்த விறுவிறுப்பு சற்று குறைந்துள்ளதாக சில ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். இருந்தாலும், ‘திரிஷ்யம்’ தொடர் இந்திய சினிமாவின் மிகவும் வெற்றிகரமான திரில்லர் படங்களில் ஒன்றாக தொடர்ந்து பார்க்கப்படுகிறது.
மலையாளத்தில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘திரிஷ்யம்’ திரைப்படம் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில், ‘திரிஷ்யம் 3’ திரைப்படத்தின் இந்தி பதிப்பில் அஜய் தேவ்கன் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் படத்தின் வெளியீட்டு பணிகளும் வேகமடைந்துள்ளன.
மலையாள அசல் படத்தை அப்படியே காட்சிக்கு காட்சி ரீமேக் செய்யாமல், பாலிவுட் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப பல முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ‘திரிஷ்யம் 2’ படத்தின் நிகழ்வுகளிலிருந்து கதை தொடர்ந்தாலும், இந்தி பதிப்பில் திரைக்கதை, கதை சொல்லும் முறை மற்றும் காட்சிப்படுத்தலில் வித்தியாசமான அணுகுமுறை கையாளப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதனால் மலையாள பதிப்பை பார்த்த ரசிகர்களிடையேயும், பாலிவுட் ரசிகர்களிடையேயும் இந்தி ‘திரிஷ்யம் 3’ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.