சினிமா செய்திகள்

ஹிப்ஹாப் ஆதியின் “மீசைய முறுக்கு 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

ஹிப் ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ படம் இந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமானவர் ‘ஹிப் ஹாப்’ ஆதி. திரைத் துறையில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருகிறார். இவரின் பாடல்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தனி ஒருவன், ஆம்பள, அரண்மனை உள்ளிட்ட படங்களுக்கு இவர் இசையமைத்து உள்ளார்.மீசையை முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால், சிவகுமாரின் சபதம், அன்பறிவு ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார். ‘கடைசி உலகப் போர்’ எனும் படத்தை தானே தயாரித்து, இயக்கி, நடித்து, இசை அமைத்திருந்தார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது இவர் இசையமைத்த, 'டக்கர்' என்ற பாடல் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. இவர், 'ரிட்டர்ன் ஆப் தி டிராகன்' என்ற பெயரில் லண்டன், மலேசியா போன்ற வெளிநாடுகளில் வெற்றிகரமாக இசைக் கச்சேரி நடத்தி உள்ளார். மீண்டும் 'செர்டிபைடு செல்ப் மேட்' என்ற புதிய ஆல்பம் பாடல் ஒன்றை எழுதி, பாடி, இசையமைத்துள்ளார்.

இசையமைப்பாளராகத் தன்னை அறிமுகப்படுத்திய ஹிப் ஹாப் தமிழா ஆதி, தனது முதல் படமான மீசைய முறுக்கு மூலம் கதாநாயகன், இயக்குநர் என இரு வேடங்களிலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றார். திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு சுந்தர் சி தயாரிப்பில் வெளியானது. இப்படத்தில் ஆத்மிகா, விவேக், ஆர்ஜே விக்னேஷ்காந்த் மற்றும் விஜயலட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.

கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டங்களை எளிமையாக சொல்லிய அந்த படம் இளைஞர்களிடம் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் இந்த படம் கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது.

முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ‘மீசைய முறுக்கு-2’ படத்தின் இரண்டாம் பாகத்தை ஆதி இயக்கி நடித்துள்ளார். சுந்தர் சி - குஷ்பு தயாரித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. டீசரில் மூன்று கெட்டப்புகளில் ஆதி வருகிறார். இந்த படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் என 3 கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்து, இசையமைக்கும் ‘மீசைய முறுக்கு-2’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. ‘ஆரா 10க்கு 10’ பாடலை ஹிப்ஹாப் ஆதி எழுதி பாடியுள்ளார். இத்திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.