சென்னை,
ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ படம் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளது.
தனியிசை துறையில் ராப் பாடகராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, பின்னர் இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் என தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். 'ஆம்பள', 'தனி ஒருவன்', 'அரண்மனை' உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த அவர், கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்', 'அன்பறிவு' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
கல்லூரி மாணவனின் கனவு, காதல், வாழ்க்கைப் போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவான ‘மீசைய முறுக்கு ’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ‘மீசைய முறுக்கு 2’ படத்தை ஹிப் ஹாப் ஆதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துவருகிறார். இந்த படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் சி - குஷ்பு தயாரிக்கும் ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் சைத்ரா, கெட்டிகா சர்மா, ரம்யா ரங்கநாதன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர்.
முன்னதாக வெளியான ‘மீசைய முறுக்கு 2’படத்தின் டீசர் மற்றும் 'ஆரா 10/10', 'பப்பாளி பழமே' ஆகிய பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ படம் செப்டம்பர் 25ம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.