சினிமா செய்திகள்

புற்றுநோய்க்கு நம்பிக்கைதான் மருந்து - நடிகை மம்தா மோகன்தாஸ்

என்.டி. ராமராவ் நினைவாக நிறுவப்பட்டுள்ள புற்றுநோய் மருத்துவமனையை நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தொலைநோக்கு பார்வையை தொடர்கிறார்.

புற்று நோய்க்கு மருந்து இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால் புற்றுநோய்க்கு நம்பிக்கைதான் மருந்து என்று நடிகை மம்தா மோகன் தாஸ் பேசியுள்ளார்.

இந்தோ - அமெரிக்க புற்றுநோய் மருத்துவமனையில் 25 வது ஆண்டு விழா கொண்டாட்டத்தில் நடிகை மம்தா மோகன் தாஸ் கலந்து கொண்டார். புற்றுநோயில் இருந்து மீண்ட அவர் தனது கதையை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அளித்ததற்காக நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு நன்றி தெரிவித்தார்.

அவர் பேசும்போது, “வாழ்க்கையில் சில போராட்டங்கள் உண்மையானவை. அவை நிரந்தரமாக இருக்காது என்றும் நாம் நம்பலாம். அவை மிகவும் நீண்டவை. கடினமானவை மற்றும் சோர்வூட்டக்கூடியவை. புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஏற்படக்கூடிய மிக மோசமான விஷயம் என்னவென்றால் அவரை சுற்றி இத்தனை பேர் இருந்தாலும் தன்னை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று உணர்வது தான்.

என்.டி. ராமராவ் நினைவாக நிறுவப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா ஒரு மகனாக தன் தந்தையின் தொலைநோக்கு பார்வையை தொடர்கிறார். கடந்த 25 ஆண்டுகளாக அதே திசையில் பயணிப்பவர்களுக்கு அவர் ஆதரவாக இருந்து வருகிறார். அவரது மரபு தொடரட்டும். புற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் போதிய ஆதரவை பெறாதவர்களுக்கும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கும் தனிமைப்படுத்தப்பட்ட வர்களுக்கும் நம்பிக்கையையும் வலிமையும் அளிக்கட்டும். புற்று நோய்க்கு மருந்து இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ஆனால் நம்பிக்கை நிச்சயமாக இருக்கிறது.” என்று பேசினார்.

மம்தா மோகன்தாஸ் ஏற்கனவே புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.