கொள்கையில் உறுதி இல்லாதவர்களால் மாநில உரிமையை எப்படிப் பாதுகாக்க முடியும்? இந்த நாடகங்களை தமிழ்நாடு மக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்று இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. அதேவேளை மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்து தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து அதில் இருந்து மகளிருக்கு நாடாளுமன்றத்தில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த தொகுதி மறுவரையறை மூலம் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே சீராக 50 சதவீதம் அதிகரிக்க வகை செய்வதுடன் இந்த நடைமுறை அடுத்த 25 ஆண்டுகள் அமலில் இருக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறும்போது தற்போது உள்ள மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 850 வரை (மாநிலங்கள் 815, யூனியன் பிரதேசங்கள் 35) அதிகரிக்கலாம். இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மசோதா போதிய ஆதரவு இன்றி வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது.
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் வரும் 30ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அந்த கூட்டத்தொடரில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை பா.ஜ.க அரசு மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு அளிக்கும் என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த முறை இந்த மசோதா கொண்டு வந்த போது கடுமையாக எதிர்த்த திமுக, இம்முறை ஆதரவு தெரிவிப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இயக்குநர் அமீர் தனது வாட்ஸ் அப் பதிவில், “நேற்று வரை எதிர்ப்பு, இன்று ஆதரிப்பது ஏன்? தமிழ்நாட்டின் உரிமை என்பது அரசியல் வசதிக்கேற்ப மாற்றிக்கொள்ளும் நிலைப்பாடா? கொள்கையில் உறுதி இல்லாதவர்களால் மாநில உரிமையை எப்படிப் பாதுகாக்க முடியும்? இந்த நாடகங்களை தமிழ்நாடு மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.