சினிமா செய்திகள்

"பாகுபலி" படத்தில் நடிக்க சம்மதித்தது எப்படி?- சத்யராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

பிரபாஸின் காலை எடுத்து தன் தலையில் வைக்கும் காட்சி குறித்து சத்யராஜ் பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவரான சத்யராஜ், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பெரும் புகழைப் பெற்றார். குறிப்பாக கட்டப்பா கதாபாத்திரம் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் சத்யராஜ் சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். “ இயக்குனர் ராஜமவுலி ‘பாகுபலி’ படத்தின் கதையைச் சொல்ல சென்னையில் என் வீட்டுக்கு வந்தார். அப்போது ஒரு காட்சியில் நான் நடிகர் பிரபாஸின் காலை எடுத்து என் தலையில் வைக்க வேண்டும் என்று கூறினார். அது குறித்து முதலில் எனக்கு சிறிது தயக்கம் இருந்தது. அதனால் முதலில் முழுக் கதையையும் சொல்லுங்கள்; கதை எனக்கு ஏற்றதாக இருந்தால் நான் சம்மதிப்பேன் என்றேன். அவர் `என்ன ஆனாலும் செய்ய மாட்டேன் என்றால், நான் கதை சொல்ல முடியாது' என்று கூறினார். உடனே `திருமால் பெருமை' படத்தில் சிவாஜி அப்பாவின் காட்சியை உதாரணமாக கூறினேன்.

அதில் சிவகுமார் சார் காலில் இருக்கும் மெட்டியை சிவாஜி தன் வாயில் வைத்து கழற்ற முயல்வார். எங்களுக்கு நடிப்பு என்றால் சிவாஜி சார்தான். அந்த காட்சியை என் நினைவில் வைத்துக் கொண்டு நான் நடிக்க சம்மதித்தேன். பின்னர், ராஜமவுலி கூறிய முழுக்கதையும் எனக்கு சரியாக பட்டதால், நான் அவர் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டோர்” எனத் தெரிவித்துள்ளார்.