சென்னை,
ராமேசுவரம் தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது கடல் நீரில் சில்லரை நாணயங்களை வீசுவது வழக்கம். அந்த சில்லரை காசுகளை, கடலில் மூழ்கி எடுக்கும் பணியை செய்து வருகிறார், கருணாஸ். இதற்கிடையில் கடலில் இருந்து கருணாசுக்கு ஒரு பதக்கம் கிடைக்கிறது. அதை காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார்.
அந்த பதக்கம் விலை மதிப்பில்லாதது என்ற உண்மையை தெரிந்து கொள்ளும் போலீசார் அதை கருணாசிடம் அபகரிக்க பார்க்கிறார்கள். அது முடியாமல் போக, கருணாசை கோவில் நகை கொள்ளை வழக்கில் போலீசார் சிக்கவைக்கிறார்கள். கருணாசை காப்பாற்ற வக்கீல் நிமிஷா சஜயன் சட்டப் போராட்டத்தில் குதிக்கிறார். கருணாஸ் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கிறார். ஆனால் கருணாசின் தரப்பில் இருந்து பணத்தை தாண்டிய இழப்பீடு ஒன்றை நிமிஷா சஜயன் கேட்கிறார். இதனால் நீதிமன்றம் தாண்டி அரசும் அதிர்ச்சியடைகிறது. இது பெரும் கொந்தளிப்பையும் உண்டாக்குகிறது. கருணாஸ் அப்படி கேட்ட இழப்பீடு தான் என்ன? அதை நீதிமன்றம் செய்து தந்ததா? என்பதே பரபரப்பான மீதி கதை.
இதுவரை நகைச்சுவையிலும், குணச்சித்திர நடிப்பிலும் கவர்ந்த கருணாஸ், அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இழந்த மானத்துக்கு என்ன விலை? என்று கேட்டு அழும் காட்சியில் கலங்கடித்து விடுகிறார். நல்ல நடிகனய்யா நீர்...
நிமிஷா சஜயன் கதாபாத்திரமும் மனதில் பதிகிறது. வக்கீலாக அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் அட்டகாசம். மீண்டும் ஒரு நல்ல கதாபாத்திரம். கருணாசின் மனைவியாக விஜயலட்சுமி வீரமணி, மகனாக கமலேஷ் ஜெகன், தங்கையாக சாஷா சிவகுமார் ஆகியோரும் பொருத்தமான தேர்வு. ஓரிரு காட்சிகளே வந்தாலும் ஒய்.ஜி.மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி ஆகியோர் கவனிக்க வைத்துள்ளனர்.
ஆல்பி ஆண்டனியின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ். இசையும் படத்துடன் நம்மை நகர்த்தி செல்கிறது. எதார்த்தம் நிறைந்த காட்சிகள் படத்துக்கு பலம். சில இடங்களில் படம் மெதுவாக நகருகிறது. பதக்கத்துக்கு ஆசைப்படும் போலீசார் திடீரென கருணாசை பொய்யான வழக்கில் சிக்கவைக்கும் காட்சிகளில் கணம் இல்லை.
நீதிமன்றம், வழக்கு, விவாதங்கள் போன்ற கதைக்களத்தில் பல படங்கள் வந்திருந்தாலும், நேர்த்தியான திரைக்கதையில் யூகிக்க முடியாத காட்சிகளின் கோர்வையாக படத்தை நகர்த்தி கவனம் ஈர்த்துள்ளார், இயக்குனர் சஜீவ் பழூர்.
"என்ன விலை" - விரயம் இல்லை