பிரதீப் ரங்கநாதனின் திரைப்படங்களை பார்த்து அவரின் ரசிகனாகிவிட்டதாக சிவராஜ்குமார் பேசியுள்ளார்.
கன்னட திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ்குமார். இவர் நடித்த பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் என்பதால் ரசிகர்களின் விருப்பமான நடிகராகவும் உள்ளார். சிவராஜ்குமார் தமிழில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ‘ஜெயிலர் 2’ படத்திலும் நடித்துள்ளார். தற்போது ‘666’ படத்தில் நடித்துவருகிறார்.
‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் மற்றும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படத்தில் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கெளதம் சிவராமன் இயக்கும் இந்தப் படத்தில் கானா வினோத், ஷிவானி நகரம் மற்றும் யோக லட்சுமி உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தில் சிவராஜ்குமார் அபிஷனுக்கு அப்பாவாக நடித்துவருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கியது. படத்தின் அறிவிப்பு கிளிம்ஸ் வீடியோவை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டனர்.
இந்த நிலையில், விருது விழா நிகழ்வில் பேசிய நடிகர் சிவராஜ்குமார், “நடிகர் பிரதீப் ரங்கநாதனின் அனைத்து திரைப்படங்களையும் பார்த்துவிட்டேன். அவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பிரதீப்பின் ரசிகனாகிவிட்டேன். நடிகர் தனுஷைப் பிடிக்கும் என்பதால் பிரதீப் அவரைப் போலவே தோற்றமளிக்கிறார்” என தெரிவித்துள்ளார்.