சென்னை,
சூர்யா சாருடன் எப்போதும் படம் செய்யக் காத்திருக்கிறேன். கடவுள் புண்ணியத்தில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், சூர்யா 49, 50 என்று எண்ணிக்கை அடிப்படையிலான போட்டியில் சிக்கிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. என ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
தனது நகைச்சுவை கலந்த பேச்சாலும், இயல்பான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஆர்.ஜே.பாலாஜி. 'எல்.கே.ஜி.', 'மூக்குத்தி அம்மன்', 'வீட்ல விசேஷம்' உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்றார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், சூர்யாவின் திரைப்பயணத்திலும் முக்கியமான படமாக அமைந்தது.
இந்த நிலையில், விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜியிடம், நடிகர் சூர்யாவின் 50-வது திரைப்படத்தை இயக்குவீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த அவர், ''சூர்யா சாருடன் எப்போதும் படம் செய்யக் காத்திருக்கிறேன். கடவுள் புண்ணியத்தில் அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால், சூர்யா 49, 50 என்று எண்ணிக்கை அடிப்படையிலான போட்டியில் சிக்கிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை. சூர்யா சாருடன் மீண்டும் இணையும்போது, அந்தப் படம் அவருடைய முந்தைய படத்தைவிடச் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உழைப்பேன்'' என்று தெரிவித்தார்.
தொடர்ந்து தனது திரைப்பட அனுபவங்கள் குறித்துப் பேசிய ஆர்.ஜே.பாலாஜி, 'மூக்குத்தி அம்மன்' திரைப்படத்தில் நடிக்க வைப்பதற்காக நடிகை நித்யா மேனனைத் தொடர்புகொள்ள முயற்சி செய்ததாகக் கூறினார். ஆனால், அப்போது அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், நடிகை ஸ்ருதி ஹாசனையும் அந்தப் படத்திற்காக அணுக முயற்சி செய்ததாகக் குறிப்பிட்டார். விரைவில் நித்யா மேனன், ஸ்ருதி ஹாசன் போன்ற சிறந்த நடிகைகளுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்துள்ளார்.
சூர்யாவுடன் மீண்டும் இணைவதற்கான தனது விருப்பத்தையும், முன்னணி நடிகைகளுடன் பணியாற்றும் ஆசையையும் அவர் வெளிப்படுத்தியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.