சினிமா செய்திகள்

நான் நலமுடன் இருக்கிறேன்... வைரல் வீடியோவுக்கு விளக்கம் அளித்த நடிகர் ரமேஷ் கண்ணா

சமீபத்தில் ரமேஷ் கண்ணா தள்ளாடியபடி நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

சென்னை,

நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன்'' என்று நடிகர் ரமேஷ் கண்ணா விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரமேஷ் கண்ணா. நடிகராக மட்டுமின்றி கதாசிரியர், வசனகர்த்தா, இயக்குநர் எனப் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் ரமேஷ் கண்ணா தள்ளாடியபடி நடந்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதையடுத்து அவரது உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன.

வைரலான வீடியோவில் என்ன நடந்தது?

தனியார் பல் மருத்துவமனை நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக ரமேஷ் கண்ணா கலந்து கொண்டார். அப்போது காரில் இருந்து இறங்கி நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்குச் சென்றபோது, தனது உதவியாளரின் கைகளைப் பிடித்தபடி மெதுவாக நடந்து சென்றார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவரது உடல்நிலை குறித்து தகவல்கள் வெளியாகின.

''நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன்''

இந்நிலையில், வைரல் வீடியோ குறித்து விளக்கம் அளித்துள்ள ரமேஷ் கண்ணா, தான் நலமுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''நான் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். அந்தப் பகுதியில் மழை பெய்திருந்ததால் சேறும் சகதியுமாக இருந்தது. மேலும், அங்கு மண் கொட்டப்பட்டிருந்தது. அதனால் கீழே விழுந்துவிடக் கூடாது என்பதற்காக மிகவும் கவனமாகவும் மெதுவாகவும் நடந்து சென்றேன். எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன்'' என்று விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்

இதற்கிடையே, ரமேஷ் கண்ணா தற்போது 'ஓ காட் பியூட்டிபுல்', 'கோல்மால்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். வைரல் வீடியோவால் அவரது உடல்நிலை குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு அவரே விளக்கம் அளித்துள்ள நிலையில், இந்தச் செய்தி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT