சினிமா செய்திகள்

என்னோட படத்தோட 50வது நாள் கொண்டாட்டத்தில் இருப்பது சந்தோசமா இருக்கு.. - ஐஸ்வர்யா லட்சுமி

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.

‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் தருணத்தில் தான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவான ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான இப்படத்தின் இந்த சாதனையை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் 50வது நாள் வெற்றி விழா மற்றும் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

ரூ.55 கோடி வசூல்... புதிய சாதனை

‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம் உலகளவில் ரூ55 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விஷ்ணு விஷால் நடித்த படம் முதல்முறையாக 50 கோடி வசூலை எட்டியுள்ளது.

இந்த நிகழ்வில் படக்குழுவினர் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களை நேரில் சந்தித்து, திரைப்படத்திற்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். படத்தின் வெற்றிக்காக உழைத்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் சேர்ந்தவர்களை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு நினைவுப் பரிசுகளாக சீல்டுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன. விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர், ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் பயணம் மற்றும் அதன் வெற்றியைப் பற்றிய தங்களது அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டனர்.

50வது நாள் வெற்றி கொண்டாட்டம்

இந்நிகழ்வினில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம். ‘கட்டா குஸ்தி 2’ படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளும் இந்த தருணம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை இவ்வளவு அழகாக அமைத்து, இந்த மகிழ்ச்சியான தருணத்தை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. விஷ்ணு விஷால் எனக்கு ஒரு அற்புதமான சக நடிகர். படம் வெளியான பிறகு, அவரை ஒரு தயாரிப்பாளராகவும் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு நடிகராகவும், தயாரிப்பாளராகவும் அவர் மீது வைத்திருக்கும் மரியாதை மேலும் அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்ததற்கு நன்றி. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ராஜ்மோகன் அவர்களுக்கும், சிறுவயதில் இருந்தே பாடல்கள் மூலம் பார்த்து ரசித்த பிரபுதேவா சாருக்கும் எனது நன்றி. நடனமாட வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருந்தது. நடனக் கலைஞர்களின் திறமையை எப்போதும் வியப்புடன் ரசிப்பேன். இந்த விழாவில் பிரபுதேவா சார் கலந்து கொண்டது மிகவும் சிறப்பானது.

செல்லா சார், ‘கட்டா குஸ்தி’ படத்தில் கீர்த்தி கதாபாத்திரத்திற்காக என்னைத் தேர்வு செய்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. நான் எத்தனை படங்களில் நடித்தாலும், கீர்த்தி கதாபாத்திரத்திற்கு கிடைக்கும் வரவேற்பும், அந்தக் கதாபாத்திரம் மூலம் மக்களிடம் நான் பெற்ற அன்பும் எப்போதும் எனக்கு மிகவும் சிறப்பானதாக இருக்கும். நீங்கள் நான் பணியாற்றிய மிகவும் அன்பான இயக்குநர்களில் ஒருவர். குஷ்மிதா, நீங்கள் எனக்கு ஒரு நல்ல ஆதரவாக இருந்திருக்கிறீர்கள். தயாரிப்புத் தரப்பில் ஒரு பெண்ணாக எனக்கு நல்ல நண்பராகவும் ஆதரவாகவும் நீங்கள் இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சிறப்பான திரைப்படங்களைத் தயாரிக்க வேண்டும்; நாம் இன்னும் பல படங்களில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தப் படத்தின் வெற்றிக்காக 100 சதவீதம் உழைத்த எனது ஒட்டுமொத்த குழுவினருக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் உங்கள் பணியை சிறப்பாகச் செய்ததால்தான் இன்று இந்த 50வது நாள் கொண்டாட்டத்தில் நாம் இருக்கிறோம். என்னை அழகாகத் திரையில் காட்டியவர்கள், கீர்த்தி கதாபாத்திரத்தை சிறப்பாக உருவாக்கியவர்கள், சண்டைக் காட்சிகளை அற்புதமாக அமைத்தவர்கள் என ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி ” என்றார்.

SCROLL FOR NEXT