தான் ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘டிக்டாக்’, ‘டப்ஸ்மாஷ்’ செயலிகளில் வீடியோக்கள் வெளியிட்டு இளசுகளை கவர்ந்தவர், மிருணாளினி ரவி. தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் மிருணாளினி ரவி. பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘சாம்பியன்’ படத்தில் நடித்தார்.
ஆர்யா - விஷால் நடிப்பில் வெளியான ‘எனிமி’ படத்தில் நடித்திருந்தார் மிருணாளினி ரவி. ‘எம்ஜிஆர் மகன்’, ‘ஜாங்கோ’ படங்களில் நடித்தவர், விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ படத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். அதன் பிறகு தெலுங்கில் ‘மாயா மச்சிந்த்ரா’ ஆகிய படங்களில் நடித்தார். மிருணாளினி ரவி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘ரோமியோ’. விஜய் ஆண்டனி நடித்த ‘ரோமியோ’ படம் கடந்த 2024-ம் ஆண்டு வெளியானது. அதன் பிறகு மிருணாளினி நடிப்பில் எந்தப் படங்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில், ஆன்மிகப் பேச்சாளர் மஹா விஷ்ணுவுடன் நடிகை மிருணாளினி இடம்பெற்ற புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
நடிகை மிருணாளினி, தற்போது ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவை தனது காதலராக அறிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில், “ஏனென்றால் உன்னை நேசிப்பதில், என்னை நானே நேசிப்பதைப் போன்று உணர்கிறேன். ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் எப்போதும் உன்னை மட்டுமே நான் தேர்ந்தெடுப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் அரசுப் பள்ளி மாணவர்களிடையே குருகுலக் கல்வி, பாவ -புண்ணிய பலன்கள் போன்ற தலைப்புகளில் பேசி சர்ச்சைக்குள்ளானவர் ஆன்மிகப் பேச்சாளர் எனக் கூறப்படும் மகா விஷ்ணு. பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வந்த இவர், முன் ஜென்மத்தில் செய்த பாவங்களால் ஒருவர் மாற்றுத்திறனாளியாகப் பிறக்கிறார் என இரு ஆண்டுகளுக்கு முன் அரசுப் பள்ளியில் பேசியதற்கு மாற்றுத்திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். அவருடன் மகா விஷ்னு வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இதனைத் தொடந்து மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், தனது மகாவிஷ்ணு அறக்கட்டளையை மூடுவதாக கடந்தாண்டு அவர் தெரிவித்திருந்தார்.