நடிகர் மாதவனின் மகனும், நீச்சல் வீரருமான வேதாந்த் மாதவன், தனது விளையாட்டு வாழ்க்கைக்காக குடும்பத்துடன் துபாய்க்கு குடிபெயர்ந்த அனுபவங்கள் மற்றும் பெற்றோரின் ஆதரவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தற்போது 20 வயதாகும் வேதாந்த் மாதவன், கொரோனா பரவல் காலத்தில் இந்தியாவில் நீச்சல் குளங்கள் மூடப்பட்டிருந்த சூழ்நிலையில் தனது குடும்பத்துடன் துபாய்க்கு இடம்பெயர்ந்தார். இதுகுறித்து பேசிய அவர், துபாய்க்கு குடிபெயர்ந்தது பெரும்பாலும் சுமுகமாக அமைந்ததாக தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “துபாய்க்கு இடம்பெயர்வது எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெற்றது. எங்களது சொத்துகள் அனைத்தையும் எளிதாக மாற்ற முடிந்தது. நீச்சல் பயிற்சியிலும் எந்தவித தடையும் ஏற்படவில்லை. அங்கு ஏராளமான இந்தியர்கள் இருந்ததால் புதிய சூழலுக்கு ஏற்ப பழகுவது சற்று எளிதாக இருந்தது. இருப்பினும், பள்ளி வாழ்க்கை, நீச்சல் பயிற்சி மற்றும் சமூக வாழ்க்கையை சமநிலைப்படுத்துவது ஆரம்பத்தில் சவாலாக இருந்தது. இந்தியாவில் தான் எனது முழு வாழ்க்கையையும் கழித்திருந்ததால் புதிய நாட்டின் சூழலுக்கு பழகுவதற்கு சிறிது காலம் தேவைப்பட்டது” என்றார்.
மேலும், கொரோனா காலத்தில் துபாய்க்கு சென்ற முடிவு தனது விளையாட்டு வாழ்க்கைக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்ததாகவும் அவர் கூறினார். “அந்த முடிவின் காரணமாக டென்மார்க்கில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் உருவாக்கியிருந்த வாழ்க்கை, நண்பர்கள் மற்றும் பழக்கமான சூழலை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் எனது இலக்கை நோக்கி புதிய நாட்டில் புதிய வாழ்க்கையை தொடங்க முடிந்தது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, தனது வெற்றிப் பயணத்தில் பெற்றோரின் பங்களிப்பு குறித்து பேசிய வேதாந்த், “எனது பெற்றோர் எப்போதும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். தங்கள் கனவுகளை நோக்கி பயணிக்கும் அனைவருக்கும் பெற்றோரின் முழுமையான ஆதரவு கிடைப்பதில்லை. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. அவர்களுடைய ஆதரவு இல்லாமல் இன்று நான் இந்த நிலையை அடைந்திருக்க முடியாது. நீச்சல் என்பது தனிநபர் விளையாட்டாக இருந்தாலும், அதன் பின்னால் ஒரு முழு குழுவின் பங்களிப்பு இருக்கிறது. அந்த அணியில் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்களின் ஆதரவு இல்லாமல் வெற்றியை நோக்கிய பயணம் எளிதாக அமையாது” என்று கூறினார்.