சினிமா செய்திகள்

நானே எனக்கு முதல் விமர்சகர் - ஏ.ஆர்.ரகுமான்

‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ளது.

‘ராமாயணா’ படத்தின் இசை குறித்த விமர்சனத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதில் அளித்துள்ளார்.

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராமாயணா’. இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும், ரகுல் பிரீத் சிங் சூர்ப்பனகையாகவும், ரவி துபே லட்சுமணனாகவும், சன்னி தியோல் அனுமனாகவும் நடிக்கின்றனர்.

இரண்டு பாகங்களாக உருவாகும் ‘ராமாயணா’ படத்தின் முதல் பாகம் 2026 நவம்பர் 5-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்றும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் கூட்டணி

இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

3வது பாடல் வெளியீடு

'ராமாயணா' படத்தின் முந்தைய பாடல்களான ‘ஜெய் ஜெய் ராம்’ மற்றும் ‘ராவண தாண்டவம்’ஆகிய பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், 3-வது பாடல் ‘மங்கள வண்ணமே’ வெளியாகி உள்ளது. இந்தியில் ‘மங்கள் ரங்’ என வெளியானது.

‘மங்கள் ரங்’ பாடல்

‘மங்கள் ரங்’ பாடலானது ராமர் மற்றும் சீதையின் திருமணத்தை சித்திரிப்பதாக அமைந்துள்ளது. மேலும் இந்த பாடலை ஸ்ரேயா கோஷல் மற்றும் அர்ஜித் சிங் ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடலை குமார் விஸ்வாஸ் எழுதியுள்ளார்.

‘மங்கள் ரங்’ பாடல் குறித்து இணையத்தில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இசை குறித்து விமர்சனம்

இந்த நிலையில் தனது இசை குறித்து எழுந்துள்ள விமர்சனத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றின் நேர்கானலுக்கு ஏ.ஆர்.ரகுமான் அளித்த பேட்டியில், தனது இசையை கேட்பவர்கள் முதலில் அதனை மதிப்பிடுவதற்கு முன்பு, அதற்கு நேரம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “நானே எனக்கு முதல் விமர்சகர், நான் செய்யும் எல்லாவற்றையும் நான் விரும்பி செய்கிறேன் என்பதல்ல.நாங்கள் ஒரு விஷயத்தை ஒரே நாளில் முடிவு செய்வதில்லை. சில சமயங்களில் மாதக்கணக்கில் அதனுடன் வாழ்கிறோம். அதற்கென்று ஒரு சிந்தனை செயல்முறை இருக்கிறது.

சில மெட்டுகள் ஊறுகாயை போன்றன

சில சமயங்களில் நீங்கள் மானுடவியலையும் கருத்தில் கொள்ள வேண்டும். சில நேரங்களில், ஊறுகாயை போல ஒன்றை அதன் போக்கில் விடவேண்டும். சில மெட்டுகளை பொறுத்தவரை, அது பழமையாக ஆக ஆக, மேலும் சிறப்பாகிறது. ஆனால் மக்கள் சில சமயங்களில் ஒரு பக்கத்தை மட்டுமே பார்க்கிறார்கள்.

அவர்கள் முழு படத்தையும் பார்ப்பதில்லை, எனவே சில சமயங்களில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். படம் வெளியான பிறகுதான், நாம் இதனால் தான் இந்தவிதமான இசைகளை பயன்படுத்தினோம் என விமர்சகர்களுக்கு தெரியவரும்.

திருப்திபடுத்த ஐஸ்கிரீம்தான் விற்க வேண்டும்

பொதுமக்களின் கருத்துக்கு ஒருவரால் ஒரு குறிப்பிட்ட அளவுக்கே முக்கியத்துவம் கொடுக்க முடியும். ஒரு கட்டத்திற்கு பிறகு எல்லோரையும் திருப்திபடுத்த முயற்சி செய்வதை விட, அதிலிருந்து முன்னேறி செல்ல கற்றுக்கொள்ள வேண்டும்” என கூறினார்.

இதையடுத்து ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் கருத்துகளை மேற்கோள் காட்டிய அவர், “நீங்கள் எல்லோரையும் திருப்திபடுத்த விரும்பினால், போய் ஐஸ்கிரீம் விற்கலாம்” என கூறினார்.

ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸ் மேற்கோள்

ஐஸ்கிரீம் விற்பவர் தன் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான சுவையில் ஐஸ்கிரீம் கொடுத்து அவர்களை மகிழ்விக்க முடியும். ஆனால் ஒரு தலைவரின் பணி அனைவரையும் மகிழ்விப்பது அல்ல, உண்மையான இலக்கை அடைவது. அனைவரையும் சமமாக திருப்திப்படுத்த நினைத்தால், எந்தவொரு பெரிய மாற்றத்தையும் அல்லது புதுமையையும் கொண்டுவர முடியாது.

SCROLL FOR NEXT