சென்னை,
எனக்கு யாரைப் பார்த்தும் பயம் இல்லை. என்னுடைய தொழிலை முறையாக நடத்தி வருகிறேன். நான் யாருக்கும் பினாமியாக இல்லை. தைரியம் இருந்தால் என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கட்டும். என்று கண்ணன் ரவி பேசியுள்ளார்.
'ராவண கோட்டம்', 'தலைவர் தம்பி தலைமையில்', 'டி.என்.2026' உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்தவர் கண்ணன் ரவி. இவரது தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'பேங் பேங்'. சாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கிடையே, கண்ணன் ரவியின் மகன் திருமணம் சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்காக அதிக அளவில் பணம் செலவிடப்பட்டது, வைதீக முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டன உள்ளிட்ட விவகாரங்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தையும் பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தின.
இந்த நிலையில், 'பேங் பேங்' திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற கண்ணன் ரவி, தன் மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- "சமீபகாலமாக என் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. எனக்கு யாரைப் பார்த்தும் பயம் இல்லை. என்னுடைய தொழிலை முறையாக நடத்தி வருகிறேன். நான் யாருக்கும் பினாமியாக இல்லை. தைரியம் இருந்தால் என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கட்டும். உண்மையைப் பேசுங்கள், இந்தியாவின் மீது பற்று கொண்டு, சம்பாதிக்கும் பணத்தைச் சொந்த நாட்டிலேயே செலவழிக்க வேண்டும் என்று நினைத்து வருபவர்களைக் குற்றம் சாட்டி விரட்டிவிடாதீர்கள். என் மீது உங்களால் விமர்சனங்களை மட்டுமே வைக்க முடியும். ஆனால், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாது" என்றார். கண்ணன் ரவியின் இந்தப் பேச்சு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.