‘ராக்கா’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கூறியுள்ளார்.
மலையாள நடிகையான, ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ஒன்று மற்றும் இரண்டாம் பாகங்களில் பூங்குழலி கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். இதற்கு முன்பாக அவர் நடித்த ‘ஜகமே தந்திரம்’, ‘புத்தம் புது காலை’ உள்ளிட்ட திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. தொடர்ந்து, கேப்டன், கட்டா குஸ்தி, அம்மு குமாரி உள்ளிட்ட படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றன. 2025ல் ‘தக் லைப்’ படத்தில் இவர் நடித்திருந்தார். இவர் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்த ‘மாமன்’ படமும் பெரும் வெற்றியை பெற்றது. தற்போது ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படமும் திரையரங்குகளில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. தற்போது மலையாளம், தெலுங்கு படங்களில் ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருகிறார்.
இயக்குநர் அட்லி நடிகர் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘ராக்கா’ எனப் பெயரிட்டுள்ளனர். உலகின் முன்னணி விஎப்எக்ஸ் நிறுவனங்களின் மேற்பார்வையில் இதன் முக்கிய காட்சிகள் உருவாகி வருவதால் அவதார் போன்று மிகச்சிறப்பான காட்சியனுபவங்களக ராக்கா எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
பான் உலகத் திரைப்படமாக ஆங்கிலம், கொரிய, சீன மொழிகளிலும் இப்படம் திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ராக்கா வணிக ரீதியாகவும் மிகப்பெரிய கவனம் பெறும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோன் நாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் மிருணாள் தாக்கூர், ரஷ்மிகா மந்தனா, உள்ளிட்டோர் நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.
இப்படத்தில் வில்லியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருவதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், ‘ராக்கா’ திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை என்றும் அதற்காக யாரும் தன்னை அணுகவில்லை என்றும் ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம் அளித்துள்ளார். மேலும், ‘யாராவது அந்த வாய்ப்பை வாங்கிக்கொடுங்கள்’ என பேட்டியில் கூறியுள்ளார்.