சினிமா செய்திகள்

ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவன் நானல்ல: பார்த்திபன்

தனது பேச்சு விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அது குறித்து தனது வருத்தத்தை பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

பார்த்திபன் நடிப்பில் அடுத்து தெலுங்கில் வெளியாக உள்ள திரைப்படம் ‘உஸ்தாத் பகத் சிங்’. பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்துள்ளதாக தெரிகிறது. இந்தப் படம் வரும் மார்ச் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் பார்த்திபன் தனது சாதியை வெளிப்படையாக கூறி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது பேச்சு விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், அது குறித்து தனது வருத்தத்தை பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக பார்த்திபன் கூறியிருப்பதாவது:

"சத்தியமாக சொல்கிறேன்

எந்த உள் நோக்கமும் இல்லாமல்

எந்த லாப நோக்கும் இல்லாமல்

வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ

அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.

அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி ….இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது ‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன். இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என

உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள்.

உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன்.

இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன்.

நன்றியுடன்,

ராதாகிருஷ்ணன் பார்த்திபன்" என்று பதிவிட்டுள்ளார்.