இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் 12-வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார். இதையொட்டி, மனைவிக்கு வாழ்த்து தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள உருக்கமான சமூக வலைதளப் பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ (கிருஷ்ணா பிரியா) ஆகியோர் தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான மற்றும் அன்பான நட்சத்திர தம்பதிகளில் ஒருவராவர். சுமார் 18 ஆண்டுகால நட்பிற்குப் பிறகு, இவர்கள் கடந்த 2014, நவம்பர் 9 அன்று பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இயக்குநர் அட்லீயுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி, அந்தகாரம் போன்ற படங்களைத் தயாரித்து வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம் வருகிறார்.
இந்த நிலையில், இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் 12-வது திருமண நாளை நேற்று கொண்டாடியுள்ளார். தங்களது 12-வது திருமண நாளை முன்னிட்டு அட்லீ, பிரியாவுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில், “சிறுவயது முதலே வாழ்க்கையில் எப்போதும் துணையாக நிற்கும் ஒரு உண்மையான நண்பர் இருந்தால் போதும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அழகான வாழ்க்கை வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினேன். ஆனால், அதைவிடச் சிறந்த பரிசாக உன்னைக் கொடுத்தார். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குத் துணையாக இருந்தாய். ஒரு சிறுவனை ஆணாகவும், ஓர் ஆணைச் சிறந்த மனிதராகவும் மாற்றினாய். என்னைக் கணவனாகவும், தந்தையாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நல்ல மனிதனாகவும் உருவாக்கினாய்.
உலகம் எனது வெற்றிகளைக் கொண்டாடலாம். ஆனால், இன்று நான் இருக்கும் நிலைக்குக் காரணம் உனது நிபந்தனையற்ற அன்பும், கருணையும், என் மீது நீ வைத்த நம்பிக்கையும்தான். 12 ஆண்டுகால அழகான திருமண வாழ்க்கை, கிட்டத்தட்ட 18 ஆண்டுகால நட்பு. என் வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை நீ என் அருகில் இருப்பதுதான். நீ இல்லாமல் நான் ஒன்றுமில்லை. நீ இருந்தால் எனக்கு எல்லாமே இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது சிறந்த தோழியாகவும், காதலாகவும், பலமாகவும் இருப்பதற்கு நன்றி தெரிவித்த அட்லீ, “எனது ஒவ்வொரு நாளையும் என்னுடன் இணைந்து தேர்ந்தெடுப்பதற்கு நன்றி. இனிய 12-வது திருமண நாள் வாழ்த்துகள் என் லட்டு, என் சுஜி. என்றென்றும் உன்னை நேசிப்பேன்” என்று அன்புடன் பதிவிட்டுள்ளார்.
அட்லீயின் இந்தப் பதிவு ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ – பிரியா தம்பதிக்கு மீர் என்ற மகனும், மியூ என்ற மகளும் உள்ளனர்.