சென்னை,
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகரான கவுதம் ராம் கார்த்திக், கடைசியாக 2023-ம் ஆண்டில் 'ஆகஸ்டு 16, 1947' என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது நடிப்பில் 'மிஸ்டர் எக்ஸ்', 'ரூட்', 'பிளடி பாலிடிக்ஸ்', 'கிரிமினல்' படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
இதில் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் ஆர்யாவுக்கு வில்லனாக கவுதம் ராம் கார்த்திக் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுகுறித்து கவுதம் ராம் கார்த்திக் கூறும்போது, "மீண்டும் தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக மாறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை பொறுத்தவரை இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்றெல்லாம் எனக்கு விதிமுறையும் வகுத்துக்கொள்ள வில்லை. கதை நன்றாக இருக்கும்பட்சத்தில் எந்த கதாபாத்திரத்திலும் துணிந்து நடிக்க தயார்.
அந்தவகையில் வில்லனாக நடிப்பதில் எனக்கு பிரச்சினை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இப்போதெல்லாம் வில்லன் கதாபாத்திரங்களை தான் அனைவருமே விரும்புகிறார்கள். அந்தவகையில் எனது புதிய அவதாரத்தையும் ரசிகர்கள் ரசிப்பார்கள்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.