சினிமா செய்திகள்

என்னுடைய ஊழியர்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருப்பேன்: அனுபமா பரமேஸ்வரன்

மேலும், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது காதல் அனுபவம் குறித்து அனுபமா பேசியுள்ளார்.

சென்னை,

நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது முந்தைய காதல் அனுபவம் குறித்து பேசிய போது, எனது முந்தைய உறவில் எப்போதும் ஒருவித பயத்துடனேயே இருந்தேன். ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து பேச வேண்டிய கட்டாயம் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

பரிட்சயமான நடிகை அனுபமா

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் அனுபமா பரமேஸ்வரன். தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியிலும் முதல் படத்திலேயே நன்கு பரிட்சயமான அனுபமா, தமிழில் கொடி, டிராகன் மற்றும் பைசன் காளமாடன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

ஊழியர்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருப்பேன்

இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது காதல் அனுபவம் குறித்து பேசியுள்ளார். இது தொடர்பாக அனுபமா பரமேஸ்வரன் கூறியதாவது: "என்னுடைய ஊழியர்களுடன் நான் மிகவும் நெருக்கமாக இருப்பேன். ஆனால் அவர்கள் என் கண்களை பார்த்தாலே நான் உடைந்து அழுதுவிடுவேனோ என்று பயப்படுவேன். 'எப்படி இருக்க?' என்பதுதான் அந்த நேரத்தில் என்னிடம் கேட்கக்கூடிய மிகவும் பயங்கரமான கேள்வி. ஏனென்றால் அந்தக் கேள்வி வந்தவுடன் நான் எந்த நேரத்திலும் உடைந்து போய்விடலாம். என்றார்.

ஒருவித பயத்துடனேயே இருந்தேன்

மேலும், தனது முந்தைய காதல் அனுபவம் குறித்து பேசிய போது, "துணையின் அருகில் இருக்கும்போது எப்போதும் நிம்மதியே கிடைக்க வேண்டும். ஆனால் எனது முந்தைய உறவில் எப்போதும் ஒருவித பயத்துடனேயே இருந்தேன். ஒவ்வொரு வார்த்தையையும் யோசித்து பேச வேண்டிய கட்டாயம் இருந்ததால், எப்போதும் ஒருவித எச்சரிக்கையுடனே இருந்தேன். ஆரம்பத்திலேயே இத்தகைய பயம் வருவது ஆபத்தானது. இந்த நிலை மெதுவாகவும் அமைதியாகவும் நம்மை அறியாமலேயே உருவாக்கப்படும்.

காதலன் பிறரை அடிமைப்படுத்தி வைக்கும் குணாதிசயம் கொண்டவர் என்பதை அறிந்து அவரிடம் இருந்து விலகினேன். எனது காதலன் மீது நம்பிக்கை வைத்து எனது தனிப்பட்ட வலிகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். ஆனால் அதன்மூலம் என்னிடம் உணர்வுப்பூர்வமான பிணைப்பை உருவாக்கினார். முதலில் அந்த விஷயங்கள் நம் மீது வைக்கப்படும் அக்கறை போன்று தோன்றும், ஆனால் காலப்போக்கில் ஆதிக்கம் செலுத்த தொடங்குவார்கள்.ஒரு கட்டத்தில் நான் என்ன உடை அணிய வேண்டும் என்பதை கூட அவரே தேர்ந்தெடுத்தார். எனக்கே தெரியாமல் எனது சொந்த முடிவுகளை எடுத்தார். நான் அவரை காதலிக்க தொடங்கிய மூன்று மாதங்களில் அவரது குடும்பத்தினரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். அப்போது அவரது குடும்பத்தினர் நிச்சயதார்த்தம் வரை பேசத் தொடங்கினர். அப்போது நான் நிச்சயதார்த்தத்தை தள்ளிப் போட்டேன்” என்றார். ஆனால், தனது காதலன் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.