சினிமா செய்திகள்

தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்- இயக்குனர் சேரன்

மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன்.. என சேரன் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

பிரபல இயக்குனரும் நடிகருமான சேரன், விஜய்யின் அரசியல் வருகையை கடுமையாக விமர்சித்து வந்தார். நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்த சேரன், விஜய்யை துவக்கத்தில் இருந்தே விமர்சிக்க தொடங்கினார். தற்போது, சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. ஆட்சி அமைக்க விஜய் தயாராகி வரும் நிலையில், அவருக்கு திரைத்துறையினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சேரனும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இயக்குனர் சேரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:

"சந்தித்த முதல் தேர்தலிலேயே மக்களிம் பெரும் ஆதரவை பெற்று 108 தொகுதிகளில் வென்றிருக்கும் விஜய் அவர்களை திரையுலகை சார்ந்தவன் என்ற முறையில் மனமுவந்து வாழ்த்துகிறேன்.. உங்கள் வெற்றியில் எனது மகிழ்ச்சி என்பதே தமிழ்நாட்டில் வீசும் சுதந்திரக்காற்றுதான்... எந்த கட்சிகளின் பிடியில் சிக்கி இத்தனை வருடம் தவித்தோமோ அந்த பிடியில் இருந்து விலக்கி என்னையும் மக்களையும் இளைப்பாற வைத்தமைக்கு நன்றி..

அதுவே எங்கள் நோக்கமுமாக இருந்தது என்பதே உண்மை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றி வருங்கால தலைமுறைக்கான அவசியங்களை உங்கள் ஆட்சி உருவாக்கித்தரும் என நம்புகிறேன்.. தேர்தலுக்கு முன் உங்கள் மீது வைத்த விமர்சனங்களுக்காக வருந்துகிறேன்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.