தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
தமிழ் தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் படம் வெளியாவதால் படத்திற்கான புரமோஷன் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளன.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள படம் ‘எல்ஐகே’. இப்படம் வரும் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படம் தொடர்பான பேட்டிகளை அளித்து வருகிறது படக்குழு.
அப்படியான பேட்டி ஒன்றில் எஸ்.ஜே.சூர்யாவுடன் பணிபுரிந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் பிரதீப். அதில், "எஸ்.ஜே.சூர்யா சாருடன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதன்முறை. ஓர் அழகான அனுபவமாக இருந்தது. நான் அவரின் உதவி இயக்குநராக இணைய முயன்றேன். அப்போது அவர் ‘இசை’ என்ற படத்தை இயக்கியிருந்தார். நான் கல்லூரிப் படிப்பை முடித்த பின்னர் அவரிடம் உதவி இயக்குநராக சேர சென்றேன். ஆனால் நான் அப்போது தயாராக இல்லாததால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தமிழில் டைப் செய்வது, புத்தகங்கள் படிப்பது என அவர் கூறிய எதுவும் எனக்கு தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவர் எனக்கு நல்ல அறிவுரைகள் கூறி, அன்பாக அனுப்பி வைத்தார். நான் அந்த அறிவுரைகளை என் வாழ்க்கையில் பயன்படுத்தினேன்.
நான் முதன்முதலில் கதை சொன்ன ஹீரோ எஸ்.ஜே.சூர்யா சார்தான். அவர் அந்தப் படத்தை செய்யவில்லை என்றாலும், கதை பற்றிய சில கருத்துகளை கூறினார். நான் என்னுடைய முதல் படத்தில் அந்த விஷயங்களைப் பயன்படுத்தினேன். நான் அவருடன் இணைந்து நடிப்பேன் என ஒரபோதும் நினைத்ததில்லை. எனக்குப் பிடித்த ஐந்து நடிகர்கள் பெயரை கேட்டால், அதில் அவருடைய பேரும் இருக்கும். அவரிடம் நடிப்பு பற்றி நிறைய கற்க முடியும். இந்தப் படத்தில் ஒரு காட்சி நடிக்க சிரமப்பட்டபோது, அதை எப்படிச் செய்வது எனச் சொல்லி தந்தார" என்றார்.