சினிமா செய்திகள்

மண்ணுக்கும் மக்களுக்கும் ஞானபீடம் விருதை காணிக்கையாக்குகிறேன் - வைரமுத்து

இலக்கியத்தில் வைரமுத்துவின் பங்களிப்பை போற்றும் விதமாக, ஞானபீடம் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கவிஞரும், திரைப்பட பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் வழங்கப்படும் மிகச் சிறந்த ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் கால் நூற்றாண்டுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்த பெரும் பெருமை இது என்று இலக்கியத் துறையினர் கொண்டாடி வருகிறார்கள். பலதுறை தலைவர்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து, எண்ணற்ற கவிதைத் தொகுப்புகளையும், நாவல்கள் உள்பட 40க்கும் மேற்பட்ட நூல்களையும் வெளியிட்டுள்ளார். நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் இதுவரை 7,500க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். சிறந்த திரையிசைப் பாடலுக்கான தேசிய விருதினை வைரமுத்து ஏழு முறை பெற்றிருக்கிறார்.

தமிழ் இலக்கியத் துறையில் இதுவரை 1975ஆம் ஆண்டு எழுத்தாளர் அகிலன், 2002ஆம் ஆண்டு எழுத்தாளர் ஜெயகாந்தன் ஆகிய இரண்டு பேர் மட்டுமே ஞானபீட விருது பெற்றிருக்கிறார்கள். தற்போது தமிழகத்திலிருந்து மூன்றாவது கவிஞராக ஞானபீட விருதினை வைரமுத்து பெறுகிறார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து “இந்திய இலக்கியத்தின் நோபல் பரிசு எனப்படும் ஞான பீடம் விருது பெறுவதில் மகிழ்ச்சி; தமிழ் கவிதைக்கு ஞானபீடம் விருது இதுவரை இல்லை என்ற குறை என்னால் கழிந்தது மண்ணுக்கும் மக்களுக்கும் விருதை காணிக்கையாக்குகிறேன்; விருது என் வயதை குறைத்துவிட்டது; இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்” என்று கூறியுள்ளார்.