வரும் ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், நடிகர் விஜய் அவரது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் நடிகர் ராமராஜன் விஜய் கட்சி வேட்பாளர் விபின் சக்கரவர்த்தியை ஆதரித்து தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் பிரச்சாரம் செய்து வருவது வைரல் ஆகி வருகிறது. அதிமுகவில் இருந்த அவர் தற்போது விஜய் கட்சியில் இணைந்துவிட்டாரா என பலரும் கேட்டு வருகின்றனர்.
இது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கும் ராமராஜன் “இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். இதுவரை பார்க்காத தேர்தல். நல்லவர்களுக்கு வாக்கு செலுத்தி அடுத்த 5 ஆண்டுகளை பொற்காலமாக மாற்ற வேண்டும். நான் தவறானவர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன். ஆலங்குளம் தொகுதி தவெக வேட்பாளர் எனது நீண்ட கால குடும்ப நண்பரின் மகன். அரசியலுக்கு அப்பாற்பட்டு, நட்புக்காக அவருக்கு பிரச்சாரம் செய்ய வந்துள்ளேன்.
நீண்ட இடைவெளிக்கு பின்னர் நான் நடித்து வெளியான சாமானியன் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட யாரும் முன்வராத நிலையில் ஆலங்குளத்தில் டிபிவி குடும்பத்தினர் அவர்களது தியேட்டரில் 130 நாட்கள் ஓட வைத்து வெற்றிப்படமாக ஆக்கினார்கள். அந்த குடும்பத்தினர் முன்பு கேட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவே அவர்களின் வாரிசான விபின் சக்கரவர்த்திக்கு ஆதரவு கேட்டு வந்துள்ளேன். அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர் என்பது எனக்கு முக்கியமில்லை. குடும்ப நெருக்கமும், விசுவாசமும் தான் முக்கியம். என் நண்பருக்காகவே நான் ஓட்டு கேட்க வந்துள்ளேன். எம்ஜிஆர் மீது கொண்ட மரியாதை என் உயிர் இருக்கும் வரை மாறாது” என்று பேசியுள்ளார். அதிமுகவைச் சேர்ந்த நடிகர் ராமராஜன் தவெக வேட்பாளருக்கு ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தது ஆலங்குளம் தொகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.