ஐதராபாத்,
மேடையில் பேசிய திவ்யபாரதி, "இந்தப் படத்துக்காக எதிர்கொண்ட சவால்களை நினைத்து அழக்கூடாது என்று நினைத்திருந்தும், என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று அவர் அப்போது கேட்டுக்கொண்டார்.
மாடலிங் துறையின் மூலம் திரையுலகில் அறிமுகமான திவ்யபாரதி, 'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அறிமுக படத்திலேயே ரசிகர்களை தன்வசப்படுத்தி கொண்டார். இந்த படத்தை தொடர்ந்து 'கிங்ஸ்டன்', 'மதில் மேல் காதல்', 'ஆசை', 'லிங்கம்' உள்ளிட்ட படங்களில் நடித்தார். தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.தற்போது 3 புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
திரைப்படங்களைத் தாண்டி சமூக வலைத்தளங்களிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் திவ்யபாரதி, அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக தனது நீளமான கூந்தல் மற்றும் ஸ்டைலான தோற்றத்தால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
தற்போது தெலுங்கில் இவர் 'கோட்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். ஐதராபாத்தில் நடந்த இந்த பட விழாவில் நடிகை திவ்யபாரதி பங்கேற்று பேசும்போது, இப்படத்தை பாதியிலேயே கைமாற்ற முயற்சிகள் நடந்ததாகவும், ஆனாலும் தயாரிப்பாளர் விட்டுக்கொடுக்காமல் கடும் போராட்டத்துக்கிடையே படத்தை முடித்துக் கொடுத்ததை குறிப்பிட்டார். 'தயவுசெய்து இந்த படத்தை கைவிடாதீர்கள்' என்று தயாரிப்பாளரிடம் தான் கெஞ்சியதை குறிப்பிட்டார். அப்போது திவ்யபாரதி உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். "இந்தப் படத்துக்காக எதிர்கொண்ட சவால்களை நினைத்து அழக்கூடாது என்று நினைத்திருந்தும், என்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை. ரசிகர்கள் என்னை மன்னித்துவிடுங்கள்” என்று அவர் அப்போது கேட்டுக்கொண்டார். இதற்கு முன்பாக பேச்சுலர் படத்தின் ஒரு விழாவில் இரவு நேரப் படப்பிடிப்புகளின் போது கூட தனது தாயார் தனக்காக கேரவனிலேயே விழித்திருந்து காத்திருந்ததை நினைவுகூர்ந்து உணர்ச்சிவசப்பட்டு திவ்யபாரதி அழுதது குறிப்பிடத்தக்கது.