சென்னை,
திருமணத்தின் மீது தனக்கு பெரிய நம்பிக்கை இல்லாவிட்டாலும், தாய்மை அடைவதில் அதிக ஆர்வம் இருக்கிறது. எதிர்காலத்தில் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது அல்லது உயிரியல் ரீதியாக தாயாவது என இரு வழிகளிலும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஸ்ருதி ஹாசன். நடிப்புடன் இசையிலும் ஆர்வம் கொண்டுள்ள இவர், பின்னணி பாடகியாக பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். மேலும், தனிப்பட்ட இசை ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் சாய் அபயங்கர் வெளியிட்ட ‘பவழ மல்லி’ பாடலில் தனது குரலால் கவனம் ஈர்த்தார்.
சினிமா மற்றும் இசையில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் ஸ்ருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த விஷயங்களையும் அவ்வப்போது வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமணம் மற்றும் தாய்மை குறித்து அவர் பேசிய கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.
தனது திருமணம் குறித்த எண்ணங்களை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன், ஒருமுறை திருமணத்தின் மிக நெருங்கிய கட்டம் வரை சென்றதாகவும், அந்த அனுபவம் தனக்கு எந்தவித பயத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரு துணையுடன் இணைந்து வாழ்வதும், தினமும் ஒருவரையொருவர் நேசிப்பதும்தான் முக்கியம் என்றும், அதற்கு திருமணத்திற்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் அவசியமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருமணத்தின் மீது தனக்கு பெரிய நம்பிக்கை இல்லாவிட்டாலும், தாய்மை அடைவதில் அதிக ஆர்வம் இருப்பதாக ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். எதிர்காலத்தில் குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பது அல்லது உயிரியல் ரீதியாக தாயாவது என இரு வழிகளிலும் தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். திருமணம் மற்றும் தாய்மை குறித்து ஸ்ருதி ஹாசன் வெளிப்படையாக பகிர்ந்துள்ள இந்த கருத்துகள் தற்போது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகின்றன.