சினிமா செய்திகள்

ஹீரோயிசம் பேசும் கதைகள் என்னிடம் இல்லை - இயக்குநர் சசி

விஜய் ஆண்டனி, சுவாசிகா நடிப்பில் 'நூறு சாமி' படத்தை இயக்குநர் சசி இயக்கியுள்ளார்.

'சொல்லாமலே', 'பூ', 'பிச்சைக்காரன்', 'சிவப்பு மஞ்சள் பச்சை' போன்ற தனித்துவமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் சசி, தற்போது விஜய் ஆண்டனி, சுவாசிகா நடிப்பில் 'நூறு சாமி' படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.

இதுகுறித்து சசி கூறும்போது, "அன்பாக இருப்போரை கீழே போட்டு மிதிக்கும் உலகம் இது. அந்த வகையில் ஒற்றை பெற்றோரின் கதையை இந்தமுறை சொல்லியுள்ளேன். எப்போதுமே நமக்காக அழும் தாயிடம், 'இப்போ ஏன் நடிக்கிற?' என்று பெரும்பாலான மகன்கள் கேட்பதுண்டு. இந்த படத்தின் மூலம் ஒற்றை பெற்றோரின் வலிநிறைந்த வாழ்க்கையையும், தாய்மையின் மகத்துவத்தையும் சொல்லியிருக்கிறோம்.

எதார்த்தம் தாண்டி கமர்ஷியல் படம் எடுக்காதது ஏன்? என்று என்னிடம் நிறைய பேர் கேட்பதுண்டு. எடுத்த கதை புதிதாக இருக்கும் என்றால் அதுதான் கமர்ஷியல் என்பது என் கருத்து. எடுத்த கதையை விறுவிறுப்பாக சொன்னால் போதும். நெகிழ்வு என்பது எனக்கு பிடிக்கும் என்பதால், என் படங்களில் நெகிழ்வுத்தன்மை இருக்கும்.

ஒற்றை பெற்றோர் தங்களை ரோல்மாடலாக இந்த படத்துக்கு பிறகு நினைப்பது உறுதி. ஹீரோயிசம் பேசும் கதைகள் என்னிடம் இல்லை. என் பாணி தனி” என்றார்.