சினிமா செய்திகள்

“ஜன நாயகன்” ரிலீஸில் உள்ள சிக்கல்கள் தொடர்பாக பேச எனக்கு தைரியமில்லை - இயக்குநர் வினோத்

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் தணிக்கை சான்றிதழ் இழுபறியால் வெளியாகவில்லை.

ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிப்பில் உருவானப் படம் ‘ஜன நாயகன்’. இப்படம் பொங்கல் பண்டிகையையொட்டி, கடந்த ஜனவரியே ரிலீஸுக்கு தயாரான நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. எப்போது வெளியாகும் எனவும் தெரியவில்லை.

தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் முதல்-அமைச்சரான பின்பு ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக, படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார். ஆனால், தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் இப்படம் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது. சான்றிதழ் கிடைத்தவுடன் அறிவிப்பு வெளியாகுமென தயாரிப்பாளரும் கூறியிருந்தார்.

விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 19ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ஆம் தேதி வருவதால், அதற்கு முன்பாக படத்தை ரிலீஸ் செய்யலாம் என கூறப்படுகிறது.

டிஸ்ட்ரிக்ட் (District App) செயலில் ‘ஜன நாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதல் கிடைக்காத நிலையில் டிஸ்ட்ரிக்ட் செயலியில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் வரும் ஜூன் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இயக்குநர் வினோத் செல்லும் இடங்களில் எல்லாம் அவரிடம் இப்படம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் அவரிடம் ‘ஜன நாயகன்’ ரிலீஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அது என் கைகளில் இல்லை. அந்த விவகாரத்தில் உள்ளிருக்கும் உண்மைகளை சொல்லும் தைரியம் எனக்கு இல்லை. அதை சொல்லும் தைரியம் எனக்கு வந்தாலும், அதை போடும் தைரியம் உங்களுக்கு (ஊடகங்களுக்கு) இல்லை. அதனால் படம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார். இயக்குநர் வினோத்தின் இப்பதில் ரசிகர்களிடம் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.