சினிமா செய்திகள்

நான் யாரையும் ரோல்மாடலாக எடுக்கவில்லை - நடிகை பிரீத்தி முகுந்தன்

கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள ‘அன்பில் அவன்’ படம் வருகிற 2-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.

மதுரை மக்களின் உடல்மொழி, பேச்சுவழக்கு ஆகியவற்றை தெரிந்து கொண்டு புதிய படத்தின் கேரக்டரை நுணுக்கமாக பண்ணுவதற்காக பயிற்சி எடுத்து வருவதாக நடிகை பிரீத்தி முகுந்தன் கூறியுள்ளார்.

‘ஸ்டார்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை பிரீத்தி முகுந்தன், தற்போது தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். முதல் படத்தின் வெற்றிக்குப் பிறகு 'நாக்ஜில்லா', 'கண்ணப்பா', 'சர்வம் மாயா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள மொழிப் படங்களிலும் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

‘பிளாஸ்ட்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பு

பிரீத்தி முகுந்தன் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆக்ஷன் கிங் அர்ஜுன், அபிராமி உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருந்த அவர், குறிப்பாக படத்தின் அதிரடி சண்டைக் காட்சிகளில் வெளிப்படுத்திய நடிப்புக்காக பாராட்டுகளைப் பெற்றார். இந்த வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு மேலும் பல ஆக்ஷன் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

ஒரு வருடத்தில் 4 படங்கள்

இந்நிலையில் படத்தின் கதாநாயகியான பிரீத்தி முகுந்தன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

‘அன்பில் அவன்’ படம் மனதிற்கு ரொம்ப திருப்தியாக அமைந்துள்ள படம். படத்திற்காக ரொம்ப உழைத்திருக்கிறேன். ஆக்ஷன் காட்சிகள் படத்தோடு சேர்ந்தே இருக்கிறது. இந்த ஆண்டு எனக்கு 4 படங்கள் வந்திருக்கிறது. நாமும் சினிமாத்துறையில் கால் பதித்திருக்கிறோம் என்பதில் எனக்கு பெரிய சந்தோஷம்.

தனுஷ் - பிரீத்தி முகுந்தன்

அடுத்ததாக தனுசுடன் புதிய படத்தில் நடிக்கிறேன். இந்த படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். முதன்முதலாக இப்போதுதான் கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்கிறேன். திருச்சியில் தான் நான் வளர்ந்தேன். மதுரைக்கு அடிக்கடி சென்றிருக்கிறேன். எனவே மதுரையை பற்றி எனக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் மதுரை பழக்கவழக்கங்களை ஒருவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

மதுரை மக்களின் உடல்மொழி, பேச்சுவழக்கு ஆகியவற்றை தெரிந்து கொண்டு படத்தின் கேரக்டரை நுணுக்கமாக பண்ணுவதற்காக பயிற்சி எடுத்து வருகிறேன். இந்த படத்தில் அசோக் செல்வனிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். யாரையும் நான் ரோல்மாடலாக எடுக்கவில்லை. நான் நானாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

SCROLL FOR NEXT