வளர்ப்பு என்பது மிகப்பெரிய பொறுப்பு என்றும், அதற்குத் தயாராக இல்லாவிட்டால் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதே சரியான முடிவு என்றும் அவர் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவைத் திருமணம் செய்துகொண்டார்.
இந்நிலையில், அண்மையில் அளித்த நேர்காணல் ஒன்றில் பேசிய வரலட்சுமி, தனக்குக் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளார். இது குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காரணமாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், தனது தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் எடுத்த முடிவு என்றும் அவர் விளக்கமளித்துள்ளார். தனது கணவர் நிக்கோலாயும் இதே கருத்தைக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
குழந்தையைப் பெற்றெடுப்பதற்கு முன்பு, அதன் வளர்ப்புக்கான முழுப் பொறுப்பையும் ஏற்கத் தயாராக இருக்கிறோமா என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார். அந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இல்லாதவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருப்பதும் பொறுப்பான முடிவுதான். திருமணமானவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும், இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவு என்றும் அவர் தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.
நிக்கோலாய் சச்தேவுக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு மகள் உள்ளார். அவரைத் தனது மகளாகவே கருதுவதாக வரலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும், தம்பதியரிடம் உள்ள இரண்டு செல்ல நாய்களையும் தங்களது குழந்தைகளைப் போல வளர்த்து வருவதாகக் கூறியுள்ளார்.
குழந்தை பெற்றுக்கொள்வது தொடர்பான தனது வெளிப்படையான கருத்துகளை வரலட்சுமி பகிர்ந்துள்ள நிலையில், அவரது பேச்சு தற்போது கவனம் பெற்றுள்ளது.