சென்னை,
இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமான விஜய் ஆண்டனி, பின்னர் நடிகராகவும் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இவர் தற்போது ‘பிச்சைக்காரன்’ திரைப்பட இயக்குநர் சசியுடன் இணைந்து ‘நூறு சாமி’ என்ற படத்தில் நடித்துள்ளார். பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
இந்த படத்தில் விஜய் ஆண்டனியுடன் அஜய் திஷான், சுவாசிகா, லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ் மற்றும் காவ்யா அனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வருகிற 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான புரமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், 'நூறு சாமி' திரைப்படத்தின் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் பா.ரஞ்சித், சசியுடனான தனது ஆரம்பகால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "நூறு சாமி படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் முதன்முதலாக உதவி இயக்குநராக முயற்சி செய்தபோது, என்னை தனது வீட்டுக்கு அழைத்து உட்கார வைத்து பல விஷயங்களை சொல்லி வழிகாட்டியவர் சசி சார்" என்றார்.
தொடர்ந்து பேசிய பா.ரஞ்சித், "கல்லூரி காலத்தில் நான் மிகவும் திமிராக சுற்றித் திரிவேன். அந்த சமயத்தில் சசி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் பாசமும் இருந்தது. ஒருநாள் அவர் ஒருவரை கல்லூரியில் சேர்ப்பதற்காக எங்கள் கல்லூரிக்கு வந்தார். அப்போது அவரை நான் நேரடியாக முதல்வர் அறைக்கு அழைத்துச் சென்று, சசி சார் சொல்கிற நபருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று முதல்வரையே மிரட்டினேன்" என்று சிரித்தபடி கூறினார்.
மேலும், "உன்னை கல்லூரியில் பார்க்கும்போது ரவுடி போல இருந்தது, நானும் உன்னை அப்படித்தான் நினைத்தேன் என்று சசி சார் பின்னர் கூறியிருந்தார். நான் கேட்ட ஒரு கேள்விக்கான பதில் அப்போது எனக்கு தெரியவில்லை. ஆனால் அந்த பதிலை தேடி கண்டுபிடித்து அவரிடம் சென்று சொன்னேன். அப்போது தான், 'உன்னிடம் ஒரு தனித்துவம் இருக்கிறது. நீ சினிமாவில் முயற்சி செய்' என்று என்னை ஊக்கப்படுத்தியவர் சசி சார்" என நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.