சினிமா செய்திகள்

திரைத்துறையின் நலனுக்காக முதல்-அமைச்சரை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்- இயக்குநர் விக்ரமன்

32 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யிடம் எப்படி பழகினேனோ, அதேபோல நட்புணர்வுடன் மிகவும் சகஜமாக பேசியதாக இயக்குநர் விக்ரமன் கூறியுள்ளார்.

இயக்குநர் விக்ரமன் தனது மகனுடன் சென்னை தலைமை செயலகம் சென்று முதல்-அமைச்சர் விஜய்யை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதல்-அமைச்சர் என்ற பந்தா விஜயிடம் கொஞ்சம் கூட இல்லை. 32 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் எப்படி பழகினாரோ, அதே அன்புடனும் நட்புடனும் இப்போதும் பேசினார். எப்போதும் நான் உங்கள் விஜய்தான். உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் தயங்காமல் சொல்லுங்கள் என்று கூறியது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. திரைப்படத் துறைக்கான சில கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்தேன். சந்தித்த முதல் நாளிலேயே அவரிடம் முன்வைத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் எந்த கோரிக்கையும் நான் வைத்ததில்லை.

பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கபட்ட இடங்களில் வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. அரசே வீடு கட்டி தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். உதவி இயக்குநர்களுக்கு 50 ஏக்கர் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். சின்ன திரைப்படங்களுக்கு மல்டிபிளக்ஸ் திரையரங்களில் உரிய வாய்ப்பு வழங்க வேண்டும்; நிச்சயமாக இதை அவர் செய்து கொடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது” என்று விக்ரமன் பேசி உள்ளார்.

விக்ரமன் இயக்கத்தில் வெளியான ‘பூவே உனக்காக’ திரைப்படம் விஜய்க்கு மாபெரும் வெற்றியைத் தந்தது.